மதுரை; சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூடல் மாநகரில், தமிழன்னைக்கு இழைக்கப்பட்ட அநீதி பக்தர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாக நடைபெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவில், தாய்மொழியான தமிழில் பன்னிரு திருமுறைகளையும் தேவாரம், திருவாசக மந்திரங்களையும் ஓதுவதற்கு முயன்ற சத்யபாமா தலைமையிலான தமிழ் ஓதுவார் குழுவினருக்குக் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டதா?
கும்பாபிஷேக விழாவில் சமஸ்கிருத வேத மந்திரங்களுக்கு இணையாகத் தமிழ் மந்திரங்களும், பன்னிரு திருமுறைப் பாராயணங்களும் முழுமையாக ஓதப்பட வேண்டும் என பக்தர்கள் நீதிமன்றம் வரை சென்று கோரிக்கை விடுத்திருந்தனர். அரசுத் தரப்பிலும் தமிழ் ஓதுவார்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டுத் தமிழிலும் திருக்குட நன்னீராட்டு சடங்குகள் நடைபெறும் என நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கள நிலவரமோ நேர்மாறாக அரங்கேறியுள்ளது. கும்பாபிஷேக நாளில் யாகசாலை மற்றும் மூலஸ்தானப் பகுதிகளில் சமஸ்கிருத சுலோகங்களுக்கு மட்டும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்ட நிலையில், தமிழ் மந்திரங்களை முழங்க வந்த பெண் ஓதுவார் சத்யபாமா உள்ளிட்ட தமிழ் குழுவினருக்குக் கோவில் நுழைவாயிலிலேயே அனுமதி மறுக்கப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டனர். கையில் திருமுறை ஏடுகளுடனும், பக்தியுடனும் வந்த தமிழ் ஓதுவார்களை, "உங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை; சிறப்பு பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்" என்று கூறி காவல்துறையினரும் கோவில் நிர்வாகமும் வாசலிலேயே தடுத்துக் காவல் அரண் அமைத்து நிறுத்தியது. நீண்ட நேரம் கெஞ்சியும், தங்களுடைய வழிபாட்டு உரிமையை எடுத்துரைத்தும் எதையும் காதுகொடுத்துக் கேட்காத நிர்வாகம், அவர்களைக் கோவிலுக்கு வெளியே அலைக்கழித்தது. இந்தச் சம்பவத்தைக் கண்ட பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் கோவிலின் வாசலிலேயே கொந்தளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து வளர்த்த தமிழ் மண்ணில், தமிழ் இறைவி மீனாட்சிக்குத் தமிழில் பாடி அர்ச்சனை செய்ய உரிமை இல்லையா? வடமொழி சமஸ்கிருதத்திற்கு விமரிசையாக கட் அவுட் வைக்கும் இந்த அரசு நிர்வாகம், தாய்த் தமிழுக்குக் 'கெட் அவுட்' சொல்கிறதா?" என்று பக்தர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். உயர் நீதிமன்றத்தில் சமஸ்கிருதத்துடன் தமிழ் மந்திரங்களும் சமமாக ஓதப்படும் என்று உறுதி அளித்துவிட்டு, ஓதுவார்களை வாசலில் நிறுத்தி அவமதித்தது ஏன்? அரசியல் பிரமுகர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் எளிதாகக் கிடைத்த விஐபி பாஸ்கள், காலங்காலமாகப் பக்திப் பாசுரங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் ஓதுவார்களுக்கு மறுக்கப்பட்டது எதனால்? பெண் ஓதுவார்களுக்கு உரிய சம உரிமையும் அங்கீகாரமும் இந்த ஆன்மிகத் திருவிழாவில் ஏன் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது? மதுரை மண்ணில் தமிழுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமரியாதை, உலகெங்கும் வாழும் தமிழ் பக்தர்களின் மனதை ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது. தமிழ் முழக்கத்தை முடக்கிவிட்டு நடத்தப்படும் சடங்குகள் மீனாட்சியம்மனின் அருளைப் பெற்றுத் தராது எனப் பக்தர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.கும்பாபிஷேக நாளில் சொதப்பல்
வாசலிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறை
கொந்தளித்த பக்தர்கள்: தாய்த் தமிழுக்குக் கெட் அவுட்டா?
அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எழும் அடுக்கடுக்கான கேள்விகள்
தமிழுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை