4 தளங்கள் ஓவர்.. இன்னும் 8 தளங்கள் இருக்கு.. மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள் எப்போது முடியும்?

  • மதுரை: மதுரையில் கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் ஜூலை மாதத்தில் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை 4 மாடிகள் வரை மட்டுமான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனால் இன்னும் 7 மாதங்கள் வரை கட்டுமான பணிகள் நிறைவடைய காலம் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்த போது டைடல் பார்க் அறிவிப்பை வெளியிட்டார். மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பே இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திமுக ஆட்சியின் தொடக்க காலத்திலேயே அறிவிக்கப்பட்டதால், நிச்சயமாக ஆட்சி நிறைவடைவதற்கு முன் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    Advertisement

    மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த டைடல் பார்க் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்த டைடல் பார்க் 2 கட்டங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக ரூ.289 கோடி மதிப்பீட்டில், தரைத்தளம் மற்றும் 12 அடுக்குகளுடன் 5.67 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைய இருந்தது.

    ஆனால், திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதி, நிலம் எடுப்பது மற்றும் டெண்டர் நடைமுறைகளில் ஏற்பட்ட தொடர் காலதாமதங்களால் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்க காலதாமதமானது. கடந்த டிசம்பர் மாதம் தொழில்துறை அமைச்சராக இருந்த டிஆர்பி ராஜா ஆய்வு மேற்கொண்ட போது கூட, டைடல் பார்க் கட்டுமான பணிகள் ஜூலை மாதத்தில் முடிவடையும் என்று கூறி இருந்தார்.

    Advertisement

    ஆனால் சட்டசபைத் தேர்தலில் தவெக வென்று ஆட்சியை பிடித்துள்ளது. தவெக ஆட்சி அமைத்த பின் இதுவரை டைடல் பார்க் கட்டுமான பணிகளை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவோ, மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரோ நேரில் சென்று ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை. 12 மாடி கட்டடத்தில் இதுவரை 4 தளங்கள் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது.

    இந்த டைடல் பார்க் பயன்பாட்டிற்கு வந்தால், மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் வேலைவாய்ப்பை பெறுவார்கள். இதனை வைத்து மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் தவெக ஆட்சி அமைக்கப்பட்டதில் இருந்து கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.

    Advertisement

    இதனால் இன்னும் டைடல் பார்க் கட்டுமான பணிகள் இன்னும் 7 மாதங்கள் வரை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன்பின் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு, அது பயன்பாட்டுக்கு வர அடுத்த ஆண்டு மே மாதம் ஆகிவிடும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் மதுரை இளைஞர்கள் சோகம் அடைந்திருக்கின்றனர்.

    English Summary

    TIDEL Park: Madurai TIDEL Park Misses July Opening Deadline as Only 4 Floors Completed