விஜய் மாஸ்டர்பிளான்.. 180 நாள் கெடு.. நோ ஜாமீன்! போதை நெட்வொர்க்கை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் டிஜிபி

  • மதுரை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கவும், கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் புதிய அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சரின் போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை எட்டும் நோக்கில், காவல்துறை தற்போது மிக முக்கியமான, அதிரடியான சட்ட நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ளது.

    Advertisement

    இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி உடனடியாக ஜாமீனில் (பிணையில்) வெளியே வருவதைத் தடுக்கும் வகையில், மிகக் கடுமையான உத்தரவு ஒன்றை தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோட் பிறப்பித்துள்ளார்.

    Advertisement

    ஜாமீனில் தப்ப முடியாது: 180 நாள் கெடு!

    மதுரையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் புலனாய்வுத்துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோட் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:

    "தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது பாயும் வழக்குகள் மிகத் துல்லியமாகப் புலனாய்வு செய்யப்பட வேண்டும். குறிப்பாக, கைது செய்யப்படும் குற்றவாளிகள் தொழில்நுட்பக் காரணங்களையோ அல்லது கால தாமதத்தையோ பயன்படுத்தி நீதிமன்றங்கள் மூலம் உடனடியாக ஜாமீன் பெற்று வெளியே வருவதை காவல்துறை அனுமதிக்கக் கூடாது.

    Advertisement

    இதற்காக, NDPS (போதைப்பொருள் தடுப்புச் சட்டம்) சட்டப்பிரிவுகளின் கீழ் பதியப்படும் அனைத்து முக்கிய வழக்குகளிலும், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் இருந்து 180 நாட்களுக்குள் (6 மாதங்கள்) முழுமையான குற்றப்பத்திரிகையை (Chargesheet) புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்."

    சட்டப்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனில் குற்றவாளிகளுக்கு 'சட்டரீதியான ஜாமீன்' (Statutory Bail) எளிதாகக் கிடைத்துவிடும். இந்த ஓட்டையை அடைப்பதே இந்த 180 நாட்கள் உத்தரவின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம், போதைப்பொருள் வழக்குகளில் சிக்குபவர்கள் நீண்ட காலம் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகும்.

    Advertisement

    கடத்தல் நெட்வொர்க்கிற்கு முற்றுப்புள்ளி:

    தொடர்ந்து பேசிய டி.ஜி.பி., போதைப்பொருள் புழக்கத்தை வேரோடு கிள்ளி எறிய வெறும் சில்லறை விற்பனையாளர்களை மட்டும் கைது செய்வது போதாது என்று அறிவுறுத்தினார்.

    மாநிலங்களுக்கு இடையேயான தொடர்புகள்: தமிழ்நாட்டிற்குள் கஞ்சா, சிந்தடிக் மருந்துகள் (Synthetic Drugs) மற்றும் போதை மாத்திரைகள் ஆந்திரா, ஒடிசா, பெங்களூரு போன்ற வெளிமாநில எல்லைகளில் இருந்து எவ்வாறு ஊடுருவுகின்றன என்பதை ஆழமாக ஆராய வேண்டும்.

    நெட்வொர்க் உடைப்பு: போதைப்பொருள் விநியோகச் சங்கிலியில் (Supply Chain) இருக்கும் முக்கியப் புள்ளிகள், மொத்த வியாபாரிகள் மற்றும் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் சர்வதேச அல்லது மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் நெட்வொர்க்குகளை (Smuggling Networks) துல்லியமாக அடையாளம் கண்டு அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    Advertisement

    குற்றவாளிகளை அடையாளம் காணுதல்: பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் முக்கிய நகரப் பகுதிகளில் போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் நபர்களையும், அதை சப்ளை செய்யும் உள்ளூர் குற்றவாளிகளையும் ரகசியக் கண்காணிப்பு மூலம் தொடர்ந்து அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முடக்கப்படும் சொத்துக்கள்:

    இந்த அதிரடி உத்தரவின்படி, இனிவரும் காலங்களில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் (Property Freeze) தீவிரப்படுத்தப்படவுள்ளன.

    வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு சிறப்புப் பயிற்சிகளும், வழக்குகளைத் தொய்வின்றி நடத்த சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. டி.ஜி.பி.யின் இந்த அதிரடி உத்தரவு, தமிழகத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்குப் மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

    English Summary

    TN DGP Sandeep Rai Rathore Orders 180 Days Deadline for Drug Case Chargesheet