அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது

  • மதுரை: சோழவந்தான் அருகே வாடிப்பட்டியில் அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிய தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பணிமனைக்கு திரும்பி கொண்டிருந்த அரசு பேருந்துக்கு வழிவிடாமல் தகராறில் ஈடுபட்ட தவெக நிர்வாகி தனுஷ்கோடி பட்டா கத்தியால் ஓட்டுநர் பிரசாந்தை தலையில் வெட்டிவிட்டு தப்பியோடினார். தலைமறைவாக இருந்த தனுஷ்கோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 10.40 மணிக்கு கடைசி நேர அரசு நகர பேருந்து சென்றுள்ளது. இந்தப் பேருந்தை பிரசாத் என்பவர் ஓட்டினார். பயணிகளை ஊரில் இறக்கிவிட்டுவிட்டு பேருந்து சோழவந்தானுக்கு திரும்பியது. கருப்பட்டிக்கு அருகே 4 பேர் மெயின் ரோட்டின் குறுக்கே கார் ஒன்றை நிறுத்தி இருந்தனர். காரை எடுக்கச் சொல்லி ஓட்டுநர் பிரசாத் அவர்களை எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கருப்பட்டியைச் சேர்ந்த தங்கம் என்பவரின் மகன் தனுஷ்கோடி (45), பிரசாத்தை கத்தியால் தலையில் வெட்டியுள்ளார். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. அந்தப் பேருந்தில் பணியில் இருந்த நடத்துநர் மொக்கசாமி 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மதுரை அரசு மருத்துவமனையில் பிரசாத்தை அனுமதித்தார்.

    இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனுஷ்கோடியை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், சோழவந்தான் அரசு பேருந்து பணிமனையில் 300-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணிமனை ஊழியர்கள் இன்று காலை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சோழவந்தான் பணிமனையில் 55 அரசு பேருந்துகள் இயங்காமல் நிறுத்தப்பட்டன. பணிக்குச் செல்வோர் உள்ளிட்ட பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    அரசு போக்குவரத்து கழக மேலாளர்கள், போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓட்டுநரை தாக்கிய தனுஷ்கோடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். தனுஷ்கோடி மீது போலீசார் வழக்குப் பதிவு அவரை தேடி வந்தனர்.

    ஏற்கெனவே தனுஷ்கோடி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், குண்டர் சட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய தனுஷ்கோடி தவெக நிர்வாகி என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த தனுஷ்கோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    English Summary

    A TVK functionary has been arrested for hacking a government bus driver with a knife in Vadipatti, near Sholavandan. TVK functionary, Dhanushkodi slashed the driver, on the head with a knife and fled the scene. The police subsequently arrested Dhanushkodi, who had been in hiding, and remanded him to prison.