மதுரை: சட்டமன்ற தேர்தல் தோல்வி திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி பல சிட்டிங் அமைச்சர்கள் தேர்தலில் தோல்வியை சந்தித்தனர். பல நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அப்போது மாநிலம் முழுவதும் திமுக நிர்வாகிகள் போராடினர். சோர்ந்திருந்த திமுகவுக்கு, தவெக எழுச்சி கொடுத்துள்ளதாக தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து மூத்த வழக்கறிஞர்கள் பெரும்பாலானோர் இடம்பெற்றுள்ளனர். தமிழக அரசியல் வரலாற்றில் இந்த அமைப்பு வாய்க்கப்பட்ட ஒரே அரசியல் இயக்கம் திமுக மட்டும் தான். அந்த வழி வழியாக வந்த பரம்பரையில் தான் அண்ணன் என்.ஆர் இளங்கோவன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளனர்.
இந்த பணியை திறம்பட செய்வதுடன் நாற்றங்காலில் உள்ள ஏராளமான வழக்கறிஞர்களை திறம்பட வழிநடத்தி வருகிறார்கள். வழக்கறிஞர் அணியின் பணி என்பது நீதிமன்றங்களில் வழக்காடுவதுடன் நின்றுவிடாது. அரசியல் தளத்தில் இயங்கக்கூடிய இந்த அணி முக்கியமான பல பணிகளை செய்துள்ளது. வேறு எந்த அரசியல் கட்சியும் எண்ணி பார்க்க முடியாத பணிகளை தேர்தல் களத்திலும் முக்கியமான பங்காற்றியுள்ளது. திமுக வழக்கறிஞர் அணிக்கு மட்டுமே இந்த பெருமை உள்ளது. தேர்தலுக்கு முந்தைய காலம், தேர்தல் காலம், தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் வழக்கறிஞர் அணி சிறப்பாக செயல்பட்டது. தேர்தல் பொறுப்புகளை மிக சரியாக நிறைவேற்றியது. காரணம் வழக்கறிஞரணி தங்களின் பொறுப்புகளை விஸ்தரித்து ஏற்றுள்ளது. இந்த மாதத்தில் மட்டுமே இந்த அணியின் பணியை உற்று நோக்கினால் பல விஷயங்கள் தெரியும். திமுக இந்த ஒரு வாரத்தில் மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளது. திமுக தேர்தலுக்கு பிறகு இயற்கையாக ஏற்படும் சோர்வில் நம் தோழர்கள் சிக்கியிருந்தனர். அவர்களை வீறு கொண்டு எழுந்து வீதிக்கு வரவழைத்து திமுக வரலாற்றில் அசைக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளோம். திமுக ஒரு எஃகு கோட்டை என்று நிரூபிக்கும் வாய்ப்பு தவெக நமக்கு தானாக கொடுத்துள்ளது. திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பதை காலத்திற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டியுள்ளோம்" என்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வழக்கறிஞர் அணி
தவெகவால் எழுச்சி