மதுரை: மதுரையில் ஆளுங்கட்சியினர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுப்பது பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வருகிறது. தவெகவினர் மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகளுக்கு ஃபோன் போட்டு அமைச்சரின் பிஏ பேசுகிறேன், எம்எல்ஏ பிஏ பேசுகிறேன் என்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். அதேபோல் ஒப்பந்தத்தாரர்களின் விவகரங்களை கேட்டு, அவர்களிடம் கட்டிங் கேட்க தொடங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய பவர் செண்டர்கள் உருவாகி வருகின்றனர். அதேபோல் ஆளுங்கட்சியில் கோஷ்டி பூசலும் உச்சத்தில் இருக்கிறது. இதனால் அரசு அதிகாரிகள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. திமுக ஆட்சியின் போதும் கோஷ்டி பூசல் இருந்தது.
அப்போது அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அவரவர் எல்லைகளுக்குள் இருந்து அரசியல் செய்து வந்தனர். ஆனால் தவெக ஆட்சியில் அந்த எல்லையே இல்லாமல் நிர்வாகிகள் ஆட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். தவெகவில் பதவியில் இருப்பவர்களுக்கும், பவரில் இருப்பவர்களுக்கும் இடையிலான மோதலால் மாநகராட்சி அதிகாரிகள் புலம்ப தொடங்கியுள்ளனர். மதுரையில் அமைச்சரின் பிஏ பேசுகிறேன், எம்எல்ஏ பிஏ பேசுகிறேன் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாறி மாறி உத்தரவுகள் பறக்கின்றன. இதனால் யார் சொல்வதை கேட்பது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்ப தொடங்கியுள்ளனர். அதேபோல் ஒவ்வொரு வார்டிலும் என்னென்ன பணிகள் நடக்கிறது என்பதை அறிந்து, அவர்களின் ஒப்பந்தத்தாரர்கள் யார், அவர்களின் விவரங்கள் என்ன என்று கேட்டு வருகின்றனர். இதன்பின் ஒப்பந்தத்தாரரை தொடர்பு கொண்டு கட்டிங் கேட்பதாகவும் சில தகவல் வெளி வந்துள்ளது. ஒருவேளை ஒப்பந்தத்தாரர் முரண்டு பிடித்தால், உடனடியாக இந்த பணிகளை செய்ய வேண்டாம் என்றும் உத்தரவிடத் தொடங்கி இருக்கின்றனர். திமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கும் கூட இவர்கள் கட்டிங் எதிர்பார்ப்பது பலரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருந்த போது, மதுரையில் மினி ஸ்டேடியங்கள் உருவாக்கும் பணிகள் வேகம் எடுத்தன. துணை முதல்வரின் துறை என்பதால், திமுகவினர் யாரும் ஒப்பந்தத்தாரர் பக்கமே செல்லவில்லை. ஆனால் இப்போது அந்த ஒப்பந்தத்தாரர்களிடம் தவெகவினர் கட்டிங் கேட்க தொடங்கியுள்ளதாக திமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.