இனி காலம் முழுவதும் ஓய்வுதான்.. பிடிஆரை கலாய்த்த தவெக முஸ்தபா.. மதுரை மத்தியில் பரபரப்பு

  • மதுரை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் உதவியுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. தேர்தல் தோல்வியால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிம்க இரண்டாக பிரிந்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு அமைதியாக இருந்தவர், சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க போவதாக அறிவித்துள்ளார். இதற்கு தவெக எம்எல்ஏ கொடுத்துள்ள பதில் பிடிஆர் ஆதரவாளர்களை கடுப்படைய செய்துள்ளது.

    Advertisement

    மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பிடிஆருக்கு இனி அரசியலில் இருந்து முழுமையாக மக்கள் ஓய்வு கொடுத்துவிட்டனர். அவர் கடந்த 10 வருடங்கள் முறையாக பணியாற்றியிருந்தால் மக்கள் வாக்களித்திருப்பார்களா, மாட்டார்களா. நான் கரைபடியாத கை என்று கூறினார். எதற்காக பயந்து தொகுதிக்குள் பிளாஸ்டிக் சேர் பரிசாக கொடுத்தாராம். கடந்த 5 வருடங்களாக அமைச்சராக, முன்னாள் முதல்வருக்கு நெருக்கமாக இருந்து அவர் இங்கு என்ன செய்தார்.

    Advertisement

    தொகுதியில் எங்கு பார்த்தாலும் கால்வாய் நீர் ஓடுகிறது. கோயில் நகரம் இது. ஆனால் கோவிலை சுற்றி குப்பையாக தான் உள்ளது. கோயிலுக்கு சென்று வழிபடுவோர் கால்வாய் நீரை கடந்து உள்ளே செல்ல வேண்டியுள்ளது. இதற்கு பிடிஆர் தான் காரணம். அவர் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கிறார் என்பதை விட, மக்கள் அவருக்கு ஓய்வு கொடுத்து அனுப்பியுள்ளனர் என்பதுதான் உண்மை. மீனாட்சி அம்மன் கோவிலுக்காக பல லட்சம் மக்கள் வருகிறார்கள். கோவிலை சுற்றுவட்டாரத்தை சுத்தப்படுத்த சொல்லி கேட்டுள்ளனர்.

    அதிகாரிகளுடன் ஆய்வு செய்து விரைவில் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுவோம். ஜெயலலிதா முதலமைச்சரானபோதே முதலில் 7 அமைச்சர்களை தான் நியமித்தார். எங்கள் முதலமைச்சர் விரைவில் அமைச்சரவை இலாகாவை விரிவாக்கம் செய்வார். நாங்கள் பதவியேற்று 10 நாட்களாகின்றன. பணியில் எந்த தொய்வும் இல்லாமல் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறோம். இப்போது கூட மதுரையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் நானும், எங்கள் தொண்டர்களும் ஓடி சென்று நிற்கிறோம்.

    Advertisement

    காவல்துறையும், அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். முதலமைச்சர் பதவியேற்றவுடன் திருச்சியில் 400 ரௌடிகள் தாமாக சரண்டராகிறார்கள். சட்டம் ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை மருந்து ஒழிப்புக்கு அதிக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அமைச்சரவை நிரப்பப்படாததால் எந்த பணியிலும் தொய்வு ஏற்படாமல் பணியாற்றுகிறோம். தொடர்ந்து சிறப்பான பணிகளை மேற்கொள்வோம். துரிதமாக பணிகளை செய்வோம்.

    இது உங்களுக்கான அரசு, மக்கள் அதிகாரிகளை நம்பியுள்ளனர் என்று அதிகாரிகளிடம் நடுநிலையாக பணியாற்ற சொல்லியுள்ளோம். மாநகராட்சி அதிகாரிகளிடமும், மக்களுக்காக எந்த காழ்புணர்ச்சி, தொய்வில்லாமல் பணி செய்ய சொல்லியுள்ளோம். அவர்களும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க சொல்லியுள்ளோம். மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மக்கள் எதற்காக எங்களுக்கு வாக்களித்தார்களோ அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்" என்றார்.

    English Summary

    TVK Mustafa: DMK former minister took rest from Politics. Madurai Central TVK MLA Mustafa said, People gave permanent rest to him.