மதுரை: தமிழ்நாட்டில் தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவை திரும்ப பெறப் போவதில்லை என்று கூறிய திருமாவளவன், தவெக எம்எல்ஏ-க்களை வைத்தே ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடக்கிறதா என்பது தொடர்பாக எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைத்து நவம்பர் 13ஆம் தேதியுடன் 6 மாதங்கள் நிறைவடைகிறது. இதனால் தவெக மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக மற்றும் அதிமுக முயற்சிப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் தவெக பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால், தவெகவின் காலை வார மாட்டார்கள் என்று நம்புகிறது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் ஆதரவு அளிக்கவில்லை என்றால், என்ன செய்வது என்று தவெக கருதுகிறது. தவெகவின் ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என்றாலும், மக்களிடையே அதிருப்தி நிலவக் கூடும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடக்கிறதா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். தவெகவுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணி கட்சிகள் ஆதரவை திரும்ப பெறப் போவதில்லை. வேறு எந்த வழியில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள் என்பது தெரியாது. தவெக எம்எல்ஏ-க்களை வைத்தே ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடக்கிறதா என்று கேட்கிறீர்கள். தவெக எம்எல்ஏ-க்கள் அந்தாளவுக்கு பலவீனமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மட்டுமல்லாமல் கம்யூனிஸ்ட்டுகளும் ஆதரவை திரும்ப பெற மாட்டார்கள் என்று திருமாவளவன் உறுதியாக கூறியுள்ளார். ஏற்கனவே தவெக அமைத்துள்ள மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் கட்சிகள் இணைந்துவிட்டன. கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்ட நிலையிலும், அவர்கள் கூட்டணியில் இணைய முன் வரவில்லை. அதுமட்டுமல்லாமல் தவெகவை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இதனால் தவெகவுக்கு ஆதரவு அளிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.