மதுரை: சீமானை போன்ற பிழைப்புவாதி, சீமானை போன்ற சந்திர்ப்பவாதி யாரும் இருக்க முடியாது என்று அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். திமுக, காங்கிரஸ், விசிக என்று மூவரும் துரோகிகள் என்று தான் சீமான் கட்சி தொடங்கியதாக கூறிய வன்னி அரசு, தமிழக மக்கள் சீமானை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்குகிறார். இன்னும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத சூழலில், சீமான் பொது வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் என்பதையும் வெளிப்படையாக சீமான் கூறியுள்ளார்.
ஆனால் சீமானுக்கு ஆதரவு கூறுவது தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சியும் அறிவிப்பை வெளியிடவில்லை. இதனிடையே சீமானை விசிக கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சீமான் தன்னை தானே பொது வேட்பாளர் என்று அவரே சொல்லி கொள்கிறார். நான் தான் அடுத்த முதல்வர் என்று சொல்வதை போல் பேசுகிறார். யாரும் சீமானை பொது வேட்பாளராக முன்மொழியவில்லை. இருந்தாலும் அவராகவே சொல்லிக் கொள்கிறார். பார்ப்பன கடப்பாரையை கொண்டு திராவிடத்தை தகர்ப்பேன் என்று கூறிய சீமான், இன்று திராவிட கடப்பாரை எடுத்து கொண்டு தமிழ் தேசிய கோட்டையை இடிக்க கிளம்பிவிட்டார். சீமானை போன்ற பிழைப்புவாதி, சீமானை போன்ற ஒரு சந்தர்ப்பவாதி, இம்மாதிரியான அரசியலை செய்யக் கூடியவர்கள் யாரும் இருக்க முடியாது. யுத்தம் முடிவடைந்த பின் காங்கிரஸ், திமுக, விசிக என்று 3 கட்சிகளையும் துரோகிகள் என்று சொல்லிவிட்டு தான் சீமான் கட்சி தொடங்கினார். திராவிட கருத்தியலுக்கு எதிராக பேசிவிட்டு, இப்போது திடீரென கொள்கையை விட்டு விட்டு செல்வது பிழைப்புவாதம் தானே.. திராவிட பிரியாணிக்கு கையேந்தி நிற்கும் சீமான் போன்றவர்கள், வீழ்ந்துவிடாத வீரம்.. மண்டியிடாத மானம் என்கிறார்கள். ஆனால் திராவிடத்திடம் சீமான் மண்டியிட்டு கிடக்கிறார். அவரை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். அதுதான் அம்பாசமுத்திரம் சொல்லும் செய்தி என்று தெரிவித்துள்ளார். திமுக அல்லது அதிமுகவோடு சீமான் கூட்டணி அமைத்தால், விசிகவின் தேவை குறைந்துவிடும். இதனால் நாதகவை எந்த கூட்டணியிலும் இணைய வைத்துவிடக் கூடாது என்று விசிக வன்னி அரசு மூலமாக பேசுவதாகவும் பார்க்கப்படுகிறது.