இந்தியாவில் AI புரட்சி.. Jabil உடன் கை கோர்க்கும் அதானி.. சர்வதேச மையமாக மாறும் இந்தியா!

  • மும்பை: இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமத்தின் 'அதானி என்டர்பிரைசஸ்' (Adani Enterprises) மற்றும் உலகளாவிய உற்பத்தித் தீர்வுகளை வழங்கும் 'ஜேபில்' (Jabil Inc) நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு பிரம்மாண்டமான கூட்டணியை அறிவித்துள்ளன. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) ஹார்டுவேர் மற்றும் டேட்டா சென்டர் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதே இந்த பார்ட்னர்ஷிப்பின் முக்கிய நோக்கமாகும்.

    Advertisement

    இந்த முயற்சியின் மூலம், அடுத்த தலைமுறை ஏஐ ரேக்குகள், சர்வர்கள், ஸ்டோரேஜ் மற்றும் நெட்வொர்க்கிங் கருவிகளை இந்தியாவிலேயே தயாரித்து, இந்தியாவை உலகளாவிய ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்ற இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

    Advertisement

    சிறப்பம்சங்கள்:

    அதானி குழுமத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், பசுமை எரிசக்தி, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டேட்டா சென்டர் திறன்களுடன், ஜேபில் நிறுவனத்தின் 60 ஆண்டுக்கால பொறியியல் மற்றும் மேம்பட்ட உற்பத்தி அனுபவமும் இணைகிறது. இது ஒரு முழுமையான ஏஐ ஹார்டுவேர் உற்பத்தி தளத்தை இந்தியாவில் உருவாக்கும்.

    என்ன பொருட்கள் தயாரிக்கப்படும்?

    இந்தக் கூட்டணி வெறும் சர்வர்களை மட்டும் தயாரிக்காமல், அதற்குத் தேவையான அனைத்து முக்கிய பாகங்களையும் தயாரிக்கும். குறிப்பாக அடுத்த தலைமுறை Liquid-cooled கொண்ட ஏஐ ரேக்குகள், சர்வர்கள் மற்றும் ஸ்டோரேஜ் சிஸ்டம்கள், நெட்வொர்க்கிங் கருவிகள், மின் விநியோக யூனிட்கள் (PDU) மற்றும் குளிர்ச்சி விநியோக யூனிட்கள் (CDU), டிரான்ஸ்பார்மர்கள், சுவிட்ச் கியர்கள் மற்றும் மேம்பட்ட வெப்ப மேலாண்மை அமைப்புகள் ஆகியவை உருவாக்கப்படும்.

    Advertisement

    பிரம்மாண்டமான சந்தை வாய்ப்பு

    உலகளவில் ஏஐ உள்கட்டமைப்பு சந்தை அடுத்த ஏழு ஆண்டுகளில் 3 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உலகளாவிய நிறுவனங்களுக்குத் தேவையான ஏஐ கருவிகளை இந்தியாவிலிருந்து வழங்க இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

    இந்தியாவின் டேட்டா சென்டர் வளர்ச்சி:

    இந்தியாவில் ஏஐ பயன்பாடு மற்றும் கிளவுட் சேவைகள் அதிகரித்து வருவதால், டேட்டா சென்டர்களுக்கான தேவை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் டேட்டா சென்டர் திறன் 5 ஜிகாவாட் முதல் 8 ஜிகாவாட் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதானி குழுமம் ஏற்கனவே 100 பில்லியன் டாலர் முதலீட்டில், 2035ஆம் ஆண்டிற்குள் 5 ஜிகாவாட் பசுமை எரிசக்தி கொண்ட டேட்டா சென்டர்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த புதிய கூட்டணி அந்த இலக்கை அடைய பெரும் உதவியாக இருக்கும்.

    Advertisement

    இது தொடர்பாக அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி கூறுகையில், "உலகம் இப்போது ஒரு அறிவுப் புரட்சி காலத்தில் நுழைகிறது. எரிசக்தி மற்றும் கணினி உள்கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் நாடுகளே அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியைத் தீர்மானிக்கும். இந்த கூட்டணியின் மூலம் இந்தியா ஏஐ தொழில்நுட்பத்தை வெறும் நுகர்வோராக மட்டும் இல்லாமல், அதை உருவாக்கி ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாறும்" என்றார்.

    ஜேபில் சிஇஓ மைக் தஸ்தூர் இது தொடர்பாகக் கூறுகையில், "இந்தியாவின் திறமையான மனிதவளம் மற்றும் வளர்ந்து வரும் ஏஐ சந்தை முதலீடுகளுக்குச் சிறந்த இடமாகும். ஜேபில் நிறுவனத்தின் பொறியியல் திறனும், அதானி குழுமத்தின் உள்கட்டமைப்பும் இணைந்து ஏஐ உலகில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.

    Advertisement

    மேக் இன் இந்தியா

    இந்த கூட்டணி மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்திற்குப் பெரும் ஆதரவாக அமையும். உயர்தர ஏஐ தயாரிப்புகளை இந்தியாவிலேயே தயாரிப்பதன் மூலம், நாட்டின் விநியோகச் சங்கிலி பலப்படும் மற்றும் ஆயிரக்கணக்கானோருக்குத் திறன் சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகும். ஒட்டுமொத்தமாக, அதானி மற்றும் ஜேபில் நிறுவனங்களின் இந்த கூட்டணி, டிஜிட்டல் உலகில் இந்தியாவின் நிலையை உலக அரங்கில் உயர்த்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    English Summary

    Adani Group and Jabil Inc. have announced a strategic alliance to manufacture next-generation liquid-cooled AI racks: ஏஐ டேட்டா சென்டர்களில் அதானி படைக்கும் புதிய சாதனை