மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஒரே ஓடுபாதையில் நேருக்கு நேர் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நேரத்தில் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சுதாரித்து டேக் ஆப் ரத்து செய்ய உத்தரவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் மும்பை விமான நிலையமும் ஒன்றாகும். நேற்று இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் லேண்டிங் ஆகி ரன்வேயில் நின்று கொண்டிருந்த போது, மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட மற்றொரு ஏர் இந்தியா விமானம் அதே ஓடுபாதையில் டேக் ஆப் செய்ய வந்தது. உடனடியாக டேக் ஆஃப் ரத்து செய்யப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், "விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர் அறிவுறுத்தலின்படி டேக் ஆஃப் ரத்து செய்யப்பட்டது" என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மும்பையில் இருந்து டெல்லி ஏர் இந்தியாவுக்கு சொந்தமான AI816 என்ற விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அகலமான பாடி அமைப்பை கொண்ட இந்த விமானம் போயிங் 777-300 ரகத்தை சேர்ந்தது ஆகும். அதேபோல, லேண்டிங் ஆகி ரன்வேயில் நின்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் AIX1547 சிலிகுரியில் இருந்து மும்பைக்கு வந்தது. இந்த விமானம் போயிங் 737 MAX 8 ரகத்தை சேர்ந்தது. இரு விமானங்களிலும் எத்தனை பயணிகள் பயணம் செய்து இருந்தனர் என்ற விவரம் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. நாட்டில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக அறியப்படும் மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் எதிர் எதிரே விமானங்கள் வந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.