மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில், அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமராவதி மாவட்ட அரசு பெண்கள் மருத்துவமனையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனையின் 3வது தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலை சுமார் 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
பச்சிளம் குழந்தைகள் வார்டில் வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் வெடித்ததே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. விபத்து நடந்த சமயத்தில் அந்த பிரிவில் மொத்தம் 39 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். தீப்பிடித்தவுடன் அங்கிருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தைகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீக்காயங்கள் மற்றும் புகை மூட்டம் காரணமாக 3 குழந்தைகள் உயிரிழந்தனர். காயமடைந்த 6 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். இந்த துயர சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அரசு உத்தரவிட்டிருக்கிறது. வென்டிலேட்டர் வெடித்ததற்கான துல்லியமான காரணம் மற்றும மருத்துவமனையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.