கரப்பான் பூச்சி ஜனதா இன்று புனேவில் போராட்டம்! தர்மேந்திர பிரதான் விலகும் வரை விட மாட்டோம் என உறுதி

  • மும்பை: நீட் தேர்வு முறைகேடு மற்றும் சிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பு இன்று மகாராஷ்டிராவின் புனேவில் போராட்டம் நடத்துகிறது. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நீட் தேர்வு முறைகேடு, சிபிஎஸ்இ குளறுபடி உள்ளிட்டவற்றிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்வைத்த விமர்சனத்தை தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கி நையாண்டியாக பதிவுகளை போட்டு வந்தார் அபிஜித் தீப்கே என்ற இளைஞர்.

    Advertisement

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஃபாலோயர்கள் எண்ணிக்கை பாஜகவின் இன்ஸ்டா ஃபாலோயர்கள் எண்ணிக்கையை தாண்டியதால் நாடு முழுவதும் கவனம் பெற்றது. இதையடுத்து, கல்வித்துறை பிரச்சனைகளை கையில் எடுத்த கரப்பான் பூச்சி ஜனதா, கடந்த 6 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் பெரிய எண்ணிக்கையில் இளைஞர்கள் பங்கேற்றனர். கல்வித்துறை அமைச்சரை மத்திய அரசு நீக்காவிட்டால் தங்கள் போராட்டம் நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்படும் என்று அபிஜித் தீப்கே எச்சரித்து இருந்தார்.

    இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று கரப்பான் பூச்சி ஜனதா போராட்டம் நடத்த உள்ளது. நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அபிஜித் தீப்கே, புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும் என்றும் மாலை 4 மணிக்கு போராட்டம் துவங்கும் என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், "இந்த போராட்டம், அமிர்தசரஸ், லக்னோ, ஜெய்ப்பூர், பெங்களூர் ஆகிய நகரங்களிலும் நடைபெறும். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய தவறினால், ஜூன் 20 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் டெல்லியில் போராட்டம் நடைபெறும்.

    Advertisement

    மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கிடைக்கும் வரை தாம் போராட்டத்தை கைவிட்டு திரும்பப் போவதில்லை. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையது அல்ல. அதே நேரத்தில், இளைஞர்களின் பிரச்சனைகளுக்காக எங்களுக்கு ஆதரவு அளிக்க விரும்பும் எவரையும் வரவேற்கிறோம். ஒருவரின் ராஜினாமாவால் மட்டும் அமைப்பு மாறிவிடாது. ஆனால், தங்களின் தவறுகளை ஏற்றுக்கொண்டு பொறுப்பேற்க மறுத்தால், அந்த மாற்றத்தை நோக்கிய முதல் படியாக ராஜினாமா அமையும்" என்றார்.

    English Summary

    Cockroach Janata movement has intensified its campaign against Union Education Minister Dharmendra Pradhan over alleged irregularities in NEET and CBSE examinations. A protest is being held in Pune today, with organizers threatening nationwide demonstrations if their demands remain unmet.