மும்பை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மும்பையில் நடத்திய போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டனர். எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் வரை பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.
தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்தாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் மிக பெரிய போராட்டங்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போராட்டத்தை நடத்தியிருந்தது. இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டத்தில் குதித்துள்ளது.
முதற்கட்டமாக மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர். கைகளில் தேசிய கொடிகள், பதாகைகள் உடன் இளைஞர்கள் திரண்டனர். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன. கடும் வெயில், தடுப்புகள் மற்றும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் போராட்டத்தில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர். மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ உள்ளிட்ட பல்வேறு இளைஞர் குழுக்களை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை வித்தியாசமான முறைகளிலும் வெளிப்படுத்தினர். இசை, பதாகைகள் மற்றும் பல்வேறு பொருட்களை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்துக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புனேவை சேர்ந்த ஏஐஎஸ்எஃப் குழுவினர் பாட்டு பாடி தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இதற்கிடையே சிவசேனா (தாக்கரே) தலைவர் ஆதித்ய தாக்கரே கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பாஜக அரசு மக்களின் வாக்கையும் குரலையும் பறித்துவிட்டது. இந்த போராட்டம் அரசியலுக்காக நடத்தப்படுவது அல்ல. ஜனநாயகம், வாக்களிக்கும் உரிமை மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பது தொடர்பானது. ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார். ஞானேஷ் குமார் ராஜினாமா உடன் சேர்த்து, தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர வேண்டும் என்பதும், 2025ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை முடக்க வேண்டும் என்பதும் கரப்பான் பூச்சி கட்சியின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. முதலில் மும்பையில் போராட்டம் நடத்தப்படும் நிலையில், வரும் நாட்களில் பெங்களூர், கோவா உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளனர். இறுதியில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா அறிவித்துள்ளது. எஸ்ஐஆர் தொடர்பான முடிவுகளில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆட்சேபனை தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர். கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 முறை ஆட்சேபனை தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர். அதுவே போராட்டத்துக்கு காரணமாக உள்ளன. இருப்பினும், இதை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டதாகவும் ஆலோசனைகள் வழங்குவது வழக்கமான நடைமுறை தான் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.கரப்பான் பூச்சி கட்சி
எதிர்ப்பு
கோரிக்கை
பின்னணி