பாலியல் வழக்கில் ‘தெஹல்கா’ தருண் தேஜ்பால் குற்றவாளி.. 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது மும்பை ஐகோர்ட்!

  • மும்பை: இளம் பெண் பத்திரிகையாளரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் குற்றவாளி என்று மும்பை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வின் போது, தன்னுடன் பணியாற்றிய இளம் பெண் பத்திரிகையாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, கடந்த 2021 ஆம் ஆண்டு கோவா கீழ் நீதிமன்றம் அவரை விடுவித்தது. கீழமை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் தவறாகக் கையாண்டதாகவும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார்.

    இந்நிலையில் விசாரணை முடிவில் இன்று விசாரணை நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீலா கோகலே மற்றும் அமித் ஜாம்சண்டேகர் அடங்கிய கோவா அமர்வு தருண் தேஜ்பால் குற்றவாளி என அதிரடியாக தீர்ப்பளித்தது.

    மேலும், அவருக்கான தண்டனை விவரங்களை இன்று பிற்பகலில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தருண் தேஜ்பால் சரணடைவதற்கு நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளது.

    இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக தருண் தேஜ்பால் தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று விசாரணையின்போது, தனக்கு 61 வயதாகிறது என்றும், ஒரு மனைவி இருப்பதாகவும் தானே இதில் பாதிக்கப்பட்டவன் எனவும் கூறி, தனக்கு கருணை காட்டுமாறு தருண் தேஜ்பால் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Former Tehelka editor Tarun Tejpal has been sentenced to 10 years in jail after being convicted for the rape of his junior colleague in 2013. The Goa Bench of Bombay High Court on Thursday overturned a trial court's 2021 acquittal of Tejpal and held him guilty of rape.