பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. 22 வயதில் இளம் நடிகை எடுத்த விபரீத முடிவு!

  • மும்பை: பல இந்தி சீரியல்கள் மற்றும் சினிமாக்களில் நடித்த இளம் நடிகை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தி சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட சஞ்சிதா என்ற 22 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு என்ன நேர்ந்தது அவர் இந்த முடிவை எடுக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

    பொதுவாக சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் என்றாலே அவர்கள் வாழ்க்கை வேற லெவலில் இருக்கும் என்றே நம்மில் பலரும் கற்பனை செய்து பார்ப்போம். ஆனால், வெகு சிலரின் வாழ்க்கை மட்டுமே அப்படி இருக்கும். பெரும்பாலானோர் மிகவும் இக்கட்டான சூழலிலேயே இருப்பார்கள். அவர்கள் சில நேரம் மோசமான முடிவுகளையும் கூட எடுக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள்.

    இந்தி சீரியல்கள்

    அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. இந்தியாவில் பிரபலமாக இருக்கும் 'கும் கும் பாக்யா' மற்றும் 'வாக்லே கி துனியா' ஆகியவற்றின் மூலம் புகழ்பெற்ற இளம் நடிகை சஞ்சிதா உகலே, நேற்று ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை அன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 22 மட்டுமே. வளர்ந்து வரும் இளம் நடிகை இவ்வளவு சிறிய வயதில் இத்தகைய முடிவை எடுத்திருப்பது இந்தி சின்னதிரை வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உயிரிழப்பு

    இந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை மும்பை நளசோபரா பகுதியில் உள்ள ஆச்சோல் என்ற பகுதியில் நடந்துள்ளது. அங்குள்ள சாய் சந்தோஷி கட்டிடத்தில் சஞ்சிதா வசித்து வந்தார். நேற்று மாலை 7 மணி முதல் 7:30 மணிக்குள், சஞ்சிதா தனது படுக்கையறையை உட்புறமாகப் பூட்டிக்கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது, அவர் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    உடனடியாக அவரது குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு வசாய்-விரார் நகராட்சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆச்சோல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சஞ்சிதாவின் தந்தை மச்சிந்திர உகலே அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சஞ்சிதாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. போலீசார் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    யார் இந்த சஞ்சிதா?

    சஞ்சிதா உகலே டிவி, சினிமா மற்றும் ஓடிடி தளங்களில் நடித்திருந்தார். இந்தி சின்னதிரை வட்டாரத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய வளரும் நடிகையாகவே பார்க்கப்பட்டார். இந்தியில் நீண்டகாலமாக ஒளிபரப்பாகி வரும் 'கும் கும் பாக்யா' தொடரில் தியா டாண்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். மேலும், 'வாக்லே கி துனியா' தொடரிலும் நடித்திருந்தார். டங்கல் டிவியின் 'தில்வாலி துல்ஹா லே ஜாயேகி' என்ற தொடரில் நடிகர் சோரப் பேடிக்கு ஜோடியாக 'சுகூன்' என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

    சின்னதிரை மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். விக்கி கௌஷல் நடிப்பில் உருவாகியுள்ள 'சாவா' திரைப்படத்தில் தாரா ராணியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மனோஜ் பாஜ்பாய் நடித்த 'சைலன்ஸ் 2: தி நைட் அவுல் பார் ஷூட்அவுட்' படத்திலும் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். மிகக் குறுகிய காலத்தில் பல முக்கியமான படங்கள், தொடர்களில் நடித்திருந்தால் சஞ்சிதாவின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலை தீர்வல்ல

    தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

    English Summary

    Prominent Hindi television and film actress Sanchita Ugale has tragically passed away(தற்கொலை செய்து கொண்ட பிரபல இந்தி நடிகை): bollywood actress took extreme step latest news in tamil.