மும்பை: பாலிவுட் நடிகர் அமீர் கானின் உறவினரும் நடிகருமான இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 10ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதை தொடர்ந்து மும்பை போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர், மற்ற தேர்தல் ஆணையர்களின் பரிந்துரைகளை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்து செல்லும் நிலையில், போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மக்கள் இயக்கங்களும் போராட்டங்களில் இறங்கியுள்ளன.
அதன்படி கடந்த வாரம் சனிக்கிழமை நாடு முழுக்க தீவிர போராட்டம் நடைபெற்றது. அதில் மும்பையில் நடந்த போராட்டத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கானின் உறவினரும் நடிகருமான இம்ரான் கானும் பங்கேற்றிருந்தார். அவரை போலீசார் கைதும் செய்திருந்தனர். இதற்கிடையே அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மும்பை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அக்டோபர் 28ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 10ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் நடிகர் இம்ரான் கானும் பங்கேற்றார். அவருடன் அவரது காதலியும் நடிகையுமான லேகா வாஷிங்டன் மற்றும் உறவினரான ஜெய்ன் மேரி கான் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது மூவரையும் மும்பை போலீசார் தடுப்பு காவலில் கைது செய்திருந்தனர். குடியேற்ற சட்ட விதிகளின் அடிப்படையில் இம்ரான் கானுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்திய குடியுரிமை இல்லாத நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அவர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பாலிவுட் படங்களில் நடித்தாலும் பல ஆண்டுகளாக இந்தியாவில் வசித்தாலும் கூட இம்ரான் கான் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்று கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 28ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இம்ரான் கானிடம் மும்பை போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதனை போலீஸ் தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.