5 தலைமுறைக்கு பிறகு பெண் குழந்தை.. இளவரசி போல் வரவேற்ற குடும்பம்! ஊரே கொண்டாடியது

  • மும்பை: நமது நாட்டில் பெண் குழந்தை என்றாலே யோசிப்பவர்கள் இன்றும் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை அந்த ஒட்டுமொத்த ஊரும் கொண்டாடி தீர்த்திருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    இந்தியாவில் எப்போதுமே ஆண் குழந்தை வேண்டும் என்றே பெற்றோர்கள் பலரும் நினைப்பார்கள். ஆண்- பெண் இருவரும் சமம் என்றாலும் இந்திய சமூகத்தில் எப்போதும் பெண் குழந்தையை காட்டிலும் ஆண் குழந்தைக்கு சற்றே கூடுதல் முக்கியத்துவம் இருக்கவே செய்கிறது. இதன் காரணமாகவே சிசுவில் பாலினத்தை கண்டறிவது கூட இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    கோலாகலம்

    ஆனால், அதற்கு நேர்மாறாக பெண் குழந்தை பிறந்ததை ஊரே வியக்கும் வகையில் இங்கு ஒரு குடும்பம் கொண்டாடி இருக்கிறது. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்ததை அவர்கள் கொண்டாட்டமாக வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளது. பர்லியை சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் பிறந்த கார்கி என்ற குழந்தையையும், அவரது தாயையும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து, மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    Advertisement

    இந்த குடும்பத்தில் கடந்த 5 தலைமுறைகளாக பெண் குழந்தை பிறக்காத நிலையில், தற்போது பிறந்த கார்கியை குடும்பத்தினர் இளவரசி போல் வரவேற்றனர். மருத்துவமனையில் இருந்து தாய் மற்றும் குழந்தை வீடு திரும்பியபோது நடைபெற்ற இந்த ஊர்வலத்தை அப்பகுதி மக்களும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். தங்களது குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளாக பெண் குழந்தை பிறக்கவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    மகிழ்ச்சி

    குழந்தையின் தாத்தா லிம்பாஜி தஹிபாலே, மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டம் அகமத்பூர் தாலுகாவில் உள்ள கோல்வாடி கிராமத்தை சேர்ந்தவர். குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தது குறித்து உணர்ச்சிவசப்பட்ட அவர், "குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறப்பது மிக பெரிய அதிர்ஷ்டம். இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் இருந்தது. இன்று அந்தக் குறை நிறைவேறியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

    Advertisement

    லட்சுமி

    குழந்தையின் பாட்டி சுரேகா தஹிபாலே, குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்தார். "லட்சுமி இன்று எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்" என்று அவர் கூறினார். குழந்தையின் தந்தையும் பெண் குழந்தை பிறந்தது தனி மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறினார். அவர் மேலும், "பொதுவாக மக்கள் ஆண் குழந்தையை விரும்புகிறார்கள். ஆனால் பெண் குழந்தை பிறப்பதால் கிடைக்கும் உணர்வும் மகிழ்ச்சியும் வேறுபட்டது. பெண் குழந்தைகள் தந்தையுடன் அதிக பாசமாக இருப்பார்கள். எங்கள் மகளை ஒரு பூவைப் போல வளர்ப்போம்" என்று அவர் தெரிவித்தார்.

    Advertisement

    பெண் குழந்தை

    பெண் குழந்தையின் பிறப்பை கொண்டாடியதன் மூலம், சமூகத்துக்கு பாசிட்டிவ் செய்தியை வழங்க வேண்டும் என்பதும் குடும்பத்தின் நோக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தை பிறப்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய தருணம் என்றும், அவர்களை வரவேற்று கொண்டாட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையில் இந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Family in Maharashtra's Beed district celebrated the birth of a girl child after nearly 200 years with a grand procession(மகாராஷ்டிராவில் கோலகலமாக நடந்த கொண்டாட்டம்): Maharashtra Family wedding latest news in tamil.