நாய்களுக்கு கூட நல்ல வசதி கிடைக்கிறது.. ஆனால் அரசு பள்ளியில்.. கொந்தளிக்கும் கரப்பான் பூச்சி கட்சி

  • மும்பை: மகாராஷ்டிராவில் அரசு பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே, அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், பள்ளி மாணவர்களை விட நாய்களுக்கு கூட நல்ல வசதி கிடைப்பதாகவும் அவர் சாடினார்.

    Advertisement

    கடந்த மாதம் கரப்பான் பூச்சி கட்சியினர் நீட் விவகாரம் தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்தியிருந்தனர். அந்த போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது நாடு முழுக்க உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று கரப்பான் பூச்சி கட்சி தொண்டர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்படி மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி பள்ளியை கரப்பான் பூச்சி இயக்கத்தின் தலைவர் அபிஜீத் திப்கே பார்வையிட்டார்.

    Advertisement

    நாய்களுக்கு கூட

    ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் திப்கே, பல அரசு பள்ளிகளில் முறையான வகுப்பறைகள், மாணவர்களுக்கான பெஞ்சுகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் கூட இல்லை என குற்றம்சாட்டினார். சில பள்ளிகளில் மாணவர்கள் நாய்களை விட மோசமாக நடத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இது மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான பிரச்சினை. மாணவர்களுக்காக அரசியல் தலைவர்கள் எதுவும் செய்யவில்லை என்றால், மக்கள் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தங்கள் குழந்தைகள் எந்த சூழ்நிலையில் படிக்கிறார்கள் என்பதை மக்கள் பார்க்க வேண்டும்" என்று அவர் சாடினார்.

    Advertisement

    ராஜினாமா செய்யுங்கள்

    மேலும், மகாராஷ்டிராவில் அரசு பள்ளிகளின் நிலை இவ்வளவு மோசமாக இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தாதா பூசே தொடரக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும், "அரசு பள்ளிகளின் நிலைமையை பாருங்கள். இதை பார்த்தால் கல்வி அமைச்சர் அந்த பதவியில் தொடரக்கூடாது என்றே சொல்ல தோன்றுகிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதன் அவசரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால்.. அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும்.

    பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் பள்ளிகளின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இன்னும் சில மாணவர்கள் தகர கூரைகளுக்கு கீழும், போதுமான பெஞ்சுகள் இல்லாமலும் படித்து வருகின்றனர். 10 ஆண்டுகளில் இந்த அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்க முடியவில்லை என்றால், மகாராஷ்டிர அரசு என்ன சாதித்தது என்பதை விளக்க வேண்டும்.

    Advertisement

    முற்றிலும் தோல்வி

    மேலும், பல கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். பள்ளிகளில் பாம்பு கடித்து குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பான கல்வி சூழலை ஏற்படுத்துவதில் அதிகாரிகள் தோல்வியடைந்திருப்பதையே இது காட்டுகிறது.

    மக்கள் தங்கள் பகுதிக்கு வரும் அரசியல் தலைவர்களிடம் கல்விக்காக எதாவது செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டும். கல்விக்காக நடவடிக்கை எடுத்தால் மட்டும் எங்களிடம் வாக்கு கேட்டு வாருங்கள்.. இல்லையென்றால் வாக்கு கேட்டு வீட்டிற்கே வர வேண்டாம் என்று அரசியல் தலைவர்களிடம் மக்கள் கூற வேண்டும். அரசியலுக்காக ஒன்று சேரும் மக்கள், நமது குழந்தைகளின் கல்விக்காகவும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.

    Advertisement

    மதம் அரசியல்

    மதம் அரசியல் குறித்து பேசிய அபிஜீத் திப்கே, "மதம் எங்கும் போய்விடாது. ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். 2029 தேர்தல்களில் Gen Z இளைஞர்கள் முக்கியமான வாக்கு சக்தியாக உருவெடுப்பார்கள். அவர்களின் பிரச்சினைகளை அரசு தீர்த்தே ஆக வேண்டும்.

    நீட் கேள்வித்தாள் லீக் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கீழ்மட்டத்தில் உள்ள சிலரை மட்டுமே கைது செய்து, முக்கிய நபர்களை பாதுகாக்கும் வகையில் செயல்படுவது போல சந்தேகம் வருகிறது. தேர்வு நடத்தும் அமைப்பில் உள்ள மூத்த அதிகாரிகளின் தொடர்பு இல்லாமல் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இது போதுமான நடவடிக்கை இல்லை" என்று சாடினார்.

    English Summary

    Cockroach Janata Party convenor Abhijeet Dipke has criticised the poor condition of Maharashtra government schools(மகாராஷ்டிராவில் போராட்டத்தில் இறங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி): Cockroach Janata Party latest news in tamil.