ஸ்விட்ச் ஆப் ஆன செல்போன்கள்.. தாக்கரேவை புறக்கணித்த தலைவர்கள்.. மீண்டும் உடையும் சிவசேனா?

  • மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) சிலர், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு மாறப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் நடந்து வரும் இந்த அரசியல் நகர்வுகள் குறித்து நாம் பார்க்கலாம்.

    Advertisement

    கடந்த 2022ம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மகாராஷ்டிராவில் இருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஷிண்டே கலகம் செய்தார். இதனால் உத்தவ் அரசு கவிழ்ந்தது. பாஜகவின் ஆதரவுடன் ஷிண்டே ஆட்சியை அமைத்த நிலையில், முதல்வராகவும் பதவியேற்றார். அதன் பிறகு அங்கு நடந்தது எல்லாம் அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே மீண்டும் உத்தவ் அணியில் ஒரு பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    Advertisement

    ஸ்விட்ச் ஆஃப்

    உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சில மக்களவை உறுப்பினர்கள் கட்சியின் மூத்த தலைவர்களின் அழைப்புகளுக்குப் பதிலளிக்காமல் இருக்கிறார்களாம்.. அவர்களுக்கு போன் செய்தாலும் ஸ்விட்ச் ஆஃப் என்பதே பதிலாக வருகிறதாம். அதே நேரம், அவர்கள் டெல்லிக்கு விரைந்துள்ளதால், கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படப்போகிறதோ என்ற அச்சம் உத்தவ் தாக்கரே தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது.

    அதிருப்தியில் உள்ள எம்பிக்கள் டெல்லியில் உள்ள ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் (துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன்) இல்லத்தில் இன்று சந்திக்க உள்ளனர். இந்தச் சந்திப்பில் ஏக்நாத் ஷிண்டேவும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    அடுத்து என்ன

    இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அந்த எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். முதலில் மக்களவையில் தங்களைத் தனி அணியாக அங்கீகரிக்கக் கோருவார்கள் என்றும், பின்னர் அந்த அணியை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் இணைப்பார்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது வரை ஆறு எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணியுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.. உத்தவ் அணியைச் சேர்ந்த சஞ்சய் தினா பாட்டீல், சஞ்சய் தேஷ்முக், நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர், ஓம்ராஜே நிம்பால்கர், பாவ்சாகேப் வக் சௌரே, சஞ்சய் ஜாதவ் ஆகியோர் இந்த அதிருப்தி டீமில் இருக்கிறார்கள். இவர்களுடன் கூடுதலாக ராஜபாவ் வாஜே என்பவரும் இணைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    Advertisement

    யாரும் வரல

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் ஒரு முக்கியக் கூட்டம் நடைபெற்றது. இருப்பினும், அதில் கட்சியின் 9 எம்.பி.க்களில் 4 பேர் மட்டுமே நேரில் கலந்துகொண்டனர். மற்றவர்கள் குடும்பக் காரணங்களைக் கூறி ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொலைப்பேசி வாயிலாகவோ இணைந்தனர். குறிப்பாக, சஞ்சய் தேஷ்முக் இந்தக் கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு, அடுத்த நாளே ஆளும் தரப்பைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவைச் சந்தித்தது சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

    இந்தச் சூழலில், உத்தவ் தாக்கரேவின் தீவிர ஆதரவாளரான சஞ்சய் ராவத், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ஒரு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது அவர், "மகாராஷ்டிரா எம்பிக்களை விலைக்கு வாங்க தலா 15 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்படுகிறது. இது மிகவும் அருவருப்பானது. ஆனால், எங்கள் எம்.பி.க்கள் யாரும் கட்சி மாறமாட்டார்கள். தவறான இமேஜ் கட்டமைக்கப்படுகிறது. கட்சி ஒற்றுமையாக இருக்கிறது" என்றார்.

    Advertisement

    ஷிண்டே தரப்பு

    மறுபுறம் ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த அமைச்சர் பிரதாப் சர்நாயக் இது குறித்துக் கூறுகையில், "மக்கள் பிரதிநிதிகளுக்குத் தங்கள் தலைமை மீது நம்பிக்கை இல்லை என்றால், அவர்கள் பால்தாக்கரேவின் கொள்கைகளை ஏற்று ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையின் கீழ் வர விரும்பினால், சிவசேனாவின் கதவுகள் அவர்களுக்கு எப்போதும் திறந்திருக்கும். அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளார்.

    இன்று டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டமும், சபாநாயகருடனான சந்திப்பும் மகாராஷ்டிரா அரசியலில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். உத்தவ் தாக்கரேவின் தரப்பில் இருந்து எம்.பி.க்கள் நழுவினால், அது மிக பெரிய அடியாகவே பார்க்கப்படும்.

    English Summary

    Six Lok Sabha MPs from Uddhav Thackeray's Shiv Sena faction are reportedly in Delhi to merge with Chief Minister Eknath Shinde's camp(மகாராஷ்டிராவில் வெடித்த மிக பெரிய அரசியல் குழப்பம்): Maharashtra Politics latest news in tamil.