தனித்தீவான மும்பை! அனைத்து சாலைகளும் திடீரென துண்டிப்பு.. மொத்தமாக முடங்கும் மகாராஷ்டிரா

  • மும்பை: மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பையை இணைக்கும் முக்கிய சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதனால் மும்பை கிட்டத்தட்டத் தனித்தீவு போலவே ஆகிவிட்டது.

    Advertisement

    வழக்கமாக ஜூன் முதல் வாரத்திலேயே இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். ஆனால், இந்தாண்டு சில வாரங்கள் வரை தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. இதனால் பல பகுதிகளில் வறட்சியான ஒரு கிளைமேட் தான் இருந்தது. எப்போ தான் மழை வரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

    Advertisement

    கனமழை

    இருப்பினும், தென்கிழக்கு மழை ஆரம்பித்தவுடன் கேப் விடாமல் அது வெளுத்து வாங்கி வருகிறது. மகாராஷ்டிராவில் இந்தாண்டும் கூட பல்வேறு பகுதிகளிலும் அதிதீவிர கனமழை கொட்டியது. மும்பை - புனே விரைவுச்சாலை, மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மும்பை - கொங்கண் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளன.

    தனித்தீவான மும்பை

    குறிப்பாக, புதிதாகத் திறக்கப்பட்ட 'மிஸ்ஸிங் லிங்க்' என்ற சாலையின் 2வது சுரங்கப்பாதை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 100 டன் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் புனே - மும்பை வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீட்புப் பணிகளுக்கு பிறகே, பல மணி நேரம் கழித்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் நெரிசலில் சிக்கின. இப்படி முழுமையாகத் துண்டிக்கப்பட்டதால் மும்பை கிட்டத்தட்டத் தனித்தீவு போலவே ஆகிவிட்டது.

    Advertisement

    மும்பை - புனே இடையேயான ரயில் பாதையிலும் தாக்குர்வாடி மற்றும் மங்கி ஹில் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, தண்டவாளங்களை மண் மூடியதால் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்திலிருந்து வந்த பல ரயில்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேற்குத் தொடர்ச்சி பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட தொலைதூர ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளுத்து வாங்கிய மழை

    கனமழை தொடர்பான விபத்துகளில் கடந்த சில நாட்களில் மட்டும் மும்பை மற்றும் புனே பகுதிகளில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் தெரிவித்துள்ளார். புனே, தானே உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழையால் விபத்து ஏற்பட்டன. பால்கர் மாவட்டத்தில் வெறும் 2 மணி நேரத்தில் 300 மி.மீ. வரை மழைப் பதிவானதால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    Advertisement

    மழை வரும் நாட்களிலும் தொடரும் என்றே வானிலை எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பை, தானே, ராய்கட், நாசிக் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களும் மிகக் கனமழை பெய்யும் என்றும், சில இடங்களில் மேக வெடிப்பு போன்ற சூழல் ஏற்பட்டு 300 மி.மீ.க்கும் அதிகமாக மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

    உத்தரவு

    கனமழை நிலைமையை ஆய்வு செய்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், சுற்றுலா தலங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் தரவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    Advertisement

    இதற்கிடையில் கனமழையால் மாநிலத்தின் உள்கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 'மிஸ்ஸிங் லிங்க்' சாலையில் ஏற்பட்ட சேதத்திற்கு காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மும்பை மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    English Summary

    Relentless monsoon rains triggered landslides on the Mumbai-Pune Expressway, forcing traffic diversions and disrupting rail services(மகாராஷ்டிராவை புரட்டி போடும் கனமழை): Maharashtra Rain latest news in tamil.