வாடகை கொடுக்க காசில்லைனு.. ரூ.86 லட்சம் கள்ளநோட்டு அச்சடித்த நாக்பூர் நபர்.. ஷாக் பின்னணி

  • மும்பை: மகாராஷ்டிராவின் நாக்பூரில் வாடகை கொடுக்க பணம் இல்லைனு ஒருவர் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கள்ளநோட்டுகளாக அச்சடித்துள்ளார். மொத்தம் ரூ.86 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

    Advertisement

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கார்பி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது வீட்டில் புஷ்பக் கிருஷ்ணா என்பவர் வாடகைக்கு தங்கினார். இவரது வாடகை ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது.

    Advertisement

    ஆனால் புஷ்பக் வீட்டை காலி செய்யவில்லை. வாடகை ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை. அதேபோல் வாடகை பணத்தையும் வழங்காமல் தொடர்ந்து 'ஓசி'யில் வீட்டில் வசித்தார்.

    இதனால் வீட்டு உரிமையாளர் ரமேஷ், புஷ்பக்கை வீட்டை காலிசெய்து செல்லும்படி கூறினார். இதுதொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புஷ்பக் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரமேசை மிரட்டினார். பயந்துபோன ரமேஷ் போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசில் புகார் அளித்திருப்பது பற்றி அறிந்தவுடன் புஷ்பக் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே தான் ரமேஷ், வீட்டு பூட்டை உடைத்து உள்ளே பார்த்தார். அப்போது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. வாளி உள்பட இடங்களில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

    Advertisement

    இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து பார்த்தனர். அப்போத வீட்டில் இருந்தது கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. அதோடு கள்ளநோட்டு தயாரிக்கும் இயந்திரம் இருப்பதும் கண்டறியப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் புஷ்பக் அந்த வீட்டில் கள்ளநோட்டுகள் அச்சடித்தது தெரியவந்துள்ளது.

    அவரது வீட்டில் இருந்து ரூ.85 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்தும் ரூ.500 மதிப்பு கொண்டது. இதில் ரூ.37 லட்சம் கள்ளநோட்டுகள் இருபுறமும் அச்சடிக்கப்பட்டு இருந்தது. ரூ.48 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் ஒரு பக்கம் மட்டுமே அச்சடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. கள்ளநோட்டு, கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. புஷ்பக் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    English Summary

    In Nagpur, Maharashtra, an individual-unable to pay his rent-printed stacks of counterfeit 500-rupee notes. The police have seized a total of ₹86 lakh in fake currency and are currently searching for the man.