மும்பை: மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்து வரும் மனோஜ் ஜாரங்கே பாட்டீலின் காலவரையற்ற உண்ணாவிரதம் 14வது நாளை எட்டியுள்ள நிலையில், அவரை கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே இன்று நேரில் சந்தித்தார். ஜாரங்கே பாட்டீலுக்கு ஏதேனும் ஏற்பட்டால், மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் போராட்ட களத்துக்கு திரண்டு வருவார்கள் என்று அவர் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த ஜூன் மாதம் நீட் குளறுபடிகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை ஆரம்பித்தது. டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போராட்டம் தொடர்ந்தது. இந்த மாணவர்கள் போராட்டத்திற்கு நாடு முழுக்க ஆதரவும் வந்தது. இதனால் வேறு வழியில்லாமல் மத்திய அரசு கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருந்தார்.
கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை தொடர்ந்து நாடு முழுக்க இதுபோல பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவர்களும் கூட தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு கரப்பான் பூச்சி கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். முக்கிய போராட்டங்களுக்கு அக்கட்சி நிர்வாகிகள் நேரிலும் சென்று, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். மகாராஷ்டிராவிலும் இப்போது மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடந்து வருகிறது. ஜல்னா மாவட்டத்தில் உள்ள அந்தர்வாலி சராட்டி கிராமத்தில் மனோஜ் ஜாரங்கே பாட்டீல் இதற்காக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். அவரது போராட்டம் 14வது நாளை எட்டியுள்ள நிலையில், கரப்பான் பூச்சி கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜித் திப்கே அவரை நேரில் சந்தித்து அவரது போராட்டம் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். ஜாரங்கே பாட்டீலுடன் மகாராஷ்டிர அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது குறித்து அபிஜித் திப்கே கூறுகையில், "நான் இப்போது வைக்கும் கோரிக்கை ஒன்று தான். 14 நாட்கள் ஏற்கனவே கடந்துவிட்டன. டெல்லியில் சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மனோஜ் சாரையும் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வைக்க வேண்டுமா? ஏன் இவ்வளவு காலதாமதம்? இங்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த எது? மேலும், ஒரு சமூகத்துக்காக ஒருவர் 14 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் அல்லது அரசு பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து பேசுவதால் என்ன ஆகிவிடப்போகிறது. அரசு பிரதிநிதிகள் இங்கு வந்து அவரை சந்தித்து அவரது கோரிக்கைகளை புரிந்துகொள்ள வேண்டும். அதில் என்ன பிரச்சினை? அரசியல் தலைவர்களுக்கு சினிமா பிரபலங்களைச் சந்திக்க நேரம் இருக்கிறது. அவர்களை அலுவலகத்துக்கு அழைத்து உபசரிக்கிறார்கள். ஆனால் ஜாரங்கேவிடம் பேசுவதற்கு மட்டும் நேரம் இல்லையா?" என விமர்சித்தார். முன்னதாக, மகாராஷ்டிராவில் அரசு தேர்வுக்கு தயாராகி வந்த 28 வயதான தேஷ்முக் என்பவர் புனேயில் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர் தனக்கு சுமார் ரூ.2.5 லட்சம் கடன் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தையும் குறிப்பிட்ட திப்கே, இளைஞர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசு உரிய முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். அவர் மேலும், "சோனம் வாங்சுக்கிடம் செய்ததை போல மனோஜ் ஜாரங்கேவிடமும் காலம் தாழ்த்தக்கூடாது. இது மகாராஷ்டிரா. இங்கு அது நடக்காது. யாராவது மனோஜ் ஜாரங்கேவை தொட்டால், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் வீதிக்கு வந்து போராடும்" என்றார்.கரப்பான் பூச்சி கட்சி
மராத்தா இட ஒதுக்கீடு
அபிஜித் திப்கே
இளைஞர் தற்கொலை