Mumbai 3.0: மும்பைக்கு அருகே 4 ஆயிரம் கோடியில் புதிய நகரம்.. மகாராஷ்டிரா அரசின் மெகா பிளான்

  • மும்பை: மும்பை மாநகரத்தில் இட நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சொத்துகளின் மதிப்பும் உச்சத்தை எட்டி வருகிறது. இடநெருக்கடியை சமாளிக்கும் வகையில், புதிய நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் நவிமும்பை அருகே "Mumbai 3.0" என்ற பெயரில் புதிய நகரத்தை உருவாக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மகாராஷ்டிரா அரசு 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கபடும் மும்பை நாட்டிலேயே நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது. மும்பையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், இடப் பற்றாக்குறை காரணமாக நகரவாசிகள் திணறி வருகிறார்கள். மும்பை நகரின் அரசு வளர்ச்சி காரணமாக அங்கு ஏற்பட்டு வரும் நெரிசலை தவிர்க்க நவி மும்பை உருவாக்கப்பட்டது.

    Advertisement


    மும்பை 3.0 என்ற பெயரில் புதிய சிட்டி

    தற்போது நவி மும்பையிலும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பை 3.0 என்ற பெயரில் புதிய சிட்டியை உருவாக்க மகாராஷ்டிரா அரசு ஆலோசித்து வருகிறது. 4 ஆயிரம் கோடியில் புதிய நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கர்னாலா - சாய் சிர்னர் (கேஎஸ்சி) நியூ டவுன் என்ற பெயரில் இந்த நகரம் உருவாக்கப்பட இருக்கிறது. 124 கிராமங்களை உள்ளடக்கி இந்த நகரம் அமைகிறது.

    ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் மற்றும் பென் தாலுக்காக பகுதியில் இந்த இடங்கள் அமைந்துள்ளன. சுமார் 324 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த நகரம் அமைக்கப்பட உள்ளது. மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம்தான் இந்த நகரத்திற்கும் ஆணையமாக நியமிக்கப்பட இருக்கிறது. மும்பை - நவி மும்பை - ராய்காட் பகுதிகளை இணைக்கும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அருகிலேயே இந்த நகரம் அமைவதால், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் எளிதாக அணுகும் வகையில் அமையவிருக்கிறது.

    Advertisement

    ஒரே இடத்தில் வேலைவாய்ப்பு, குடியிருப்புகள்

    அடல் சேது மற்றும் நவி சர்வதேச விமான நிலையம் என இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு பாதைகளை ஒட்டி இந்த நகரம் அமைய உள்ளது. மும்பை அருகே திட்டமிடப்பட்டு இருக்கும் இந்த புதிய நகரம் வெறுமனே குடியிருப்புகளுக்கான புறநகராக மட்டுமின்றி புதிய பொருளாதாரம் மற்றும் குடியிருப்பு மையமாக மாறும் திட்டத்துடன் அமைக்கப்படுகிறது.

    வேலைவாய்ப்பு மற்றும் குடியிருப்பு என மக்கள் நாள்தோறும் தொலை தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, வேலைவாய்ப்புகளையும் வீடுகளையும் ஒரே இடத்தில் உருவாக்கும் நோக்கத்தில் இது ஏற்படுத்தப்படுகிறது. புதிய திட்டப்படி 104 சதுர கிலோ மீட்டர் பகுதிகள் நகரப்பகுதி மற்றும் தொழிற்துறை பகுதியாகவும், பிற பகுதிகள் பசுமை பகுதிகள், வனப்பகுதிகள் மற்றும் ஊரக குடியிருப்புகள் ஆகியவற்றை மீட்டெடுக்கும் விதமாக அமையும்.

    Advertisement

    எப்போது பணி முடியும்?

    திட்டமிட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, நவீன மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய நகர்ப்புற மையமாக இத்திட்டம் முன்னிறுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. நகரத்திற்கு தேவையான இடங்களை கையகப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த புதிய நகரம் ஒரே நாள் இரவில் வந்துவிடப்போவது இல்லை.

    திட்டமிடல் மற்றும் நிலம் தொடர்பான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இந்த முதல் கட்ட பணிகள் வடிவம் பெறவே இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். எனவே, நகர்ப்புறச் சூழலமைப்பு முழுமையாக உருவாக நீண்ட காலம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவி மும்பை அருகே புதிய நகரம் அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதால் தற்போதே அங்கு ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.

    English Summary

    Mumbai 3.0: Space constraints in Mumbai are intensifying day by day, and property values ​​are reaching record highs. To address this issue, the Maharashtra government has decided to develop a new city named "Mumbai 3.0" near Navi Mumbai, featuring modern infrastructure.