தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் பொய் வழக்கு.. ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம்.. மாணவரின் தந்தை பரபர புகார்!

  • மும்பை: மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பேராசிரியர் சூர்யநாராயண் துல்லா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அடையாளம் காணப்படாத 2 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த வழக்கின் விசாரணையும் மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவர் சாஹில் வாகோடே. 20 வயதான இவர், மும்பை ஐஐடியில் எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டு எம்எஸ்சி படித்து வந்தார். இதற்கிடையே வெள்ளிக்கிழமை மாலை போவாய் வளாகத்தில் உள்ள விடுதி அறையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவிதசி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குற்றச்சாட்டு

    இதற்கிடையே சாஹிலின் தந்தை ரவீந்திர சக்ரதர் வான்கடே அளித்த புகாரில், கடந்த 3 மாதங்களாக தனது மகன் கடுமையான மன உளைச்சலுக்கும், சாதி ரீதியான அவமதிப்புகளுக்கும் ஆளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். யவத்மாலில் 12ஆம் வகுப்பு வரை படித்த சாஹில், மும்பை ஐஐடியில் சேர்ந்த பிறகு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கல்லூரியின் முதல் ஆண்டு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சென்றதாகவும், இரண்டாம் ஆண்டில்தான் பிரச்சினைகள் தொடங்கியதாகவும் அவரது தந்தை புகாரில் தெரிவித்துள்ளார்.

    தேர்வின்போது சாஹிலை கண்காணித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் சூர்யநாராயண் துல்லா, இயக்குநர் ஷிரீஷ் பி. கேதாரேவின் அறிவுறுத்தலின்படி தனது மகனை சாதி ரீதியாக அவமதித்ததாகவும் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், "நீ கீழ் சாதியை சேர்ந்தவன் என்பதால், உன்னை எளிதாக பொய் வழக்கில் சிக்க வைக்க முடியும்" எனவும் கூட பேராசிரியர் தன்னை மிரட்டியதாக சாஹில் ஒருமுறை தன்னிடம் தெரிவித்ததாகவும் வான்கடே கூறியுள்ளார்.

    பேராசிரியர்

    தனது மகன் தற்கொலை செய்து கொள்ள பேராசிரியர் துல்லாதான் காரணம் என்றும் அவருக்கு எதிராகவும், மற்ற மூத்த அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டுதல் தொடர்பான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை வேண்டுமென்றே அவமதித்தல் பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாஹிலின் தாயும் ஏற்கனவே தனது மகன் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஐஐடி விளக்கம்

    சாஹில் உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, எக்சாம் ரூமில் அவர் மொபைல் போன் பயன்படுத்தியதாக கூறியிருந்தது. மேலும், கேள்வித்தாளை சாட்ஜிபிடிக்கு அனுப்பி பதில்களை பெற முயன்றதாகவும் ஐஐடி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், இதற்காக அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மும்பை ஐஐடி விளக்கம் அளித்துள்ளது.

    ஆசிரியர் மற்றும் துறை தலைவர் அவரிடம் பேசி ஆலோசனை வழங்கியதுடன், இந்த சம்பவம் அவரது கல்வி வாழ்க்கையை பாதிக்காது என உறுதியளித்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு சாஹில் விடுதி அறைக்கு திரும்பியதாகவும் அதைத் தொடர்ந்தே மாலையில் அவர் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் மும்பை ஐஐடி கூறியுள்ளது.

    தொடரும் துயரம்

    இருப்பினும், மும்பை ஐஐடியின் இந்த விளக்கத்திற்கு நேர்மாறாகவே மாணவரின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையும் மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 7 மாதங்களில் மும்பை ஐஐடி வளாகத்தில் அரங்கேறிய மூன்றாவது மாணவர் தற்கொலை இதுவாகும். கடந்த பிப்ரவரி மாதம் தான் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரும், ஜூலை மாதம் 20 வயதான இரண்டாம் ஆண்டு பிகெட் மாணவர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

    தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

    English Summary

    A professor at IIT Bombay has been booked for alleged abetment of suicide after 20-year-old MSc student Sahil Wankhede(மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை): Mumbai IIT latest news in tamil.