மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மொஹர்ரம் ஊர்வலத்தில் பங்கேற்க இருந்த சுமார் 15,000 பேரைக் கொலை செய்ய ஒருவர் முயன்றுள்ளார். அவர்களுக்கு வலி நிவாரணி என்ற பெயரில் விஷ மாத்திரையைக் கொடுத்துக் கொல்ல முயன்றுள்ளான். சரியான நேரத்தில் போலீசார் அந்த நபரைக் கைது செய்ததால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
மும்பையில் நடைபெற்ற மொஹர்ரம் ஊர்வலத்தின் போது, பொதுமக்களுக்கு வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விஷ மாத்திரைகளை விநியோகம் செய்ய முயன்ற ஃபய்யாஸ் பிரேம்ஜி என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் ஒரு மிகப் பெரிய அசம்பாவிதம் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.
மும்பையின் பைகுல்லா பகுதியில் இந்த மாத்திரைகளை உட்கொண்ட சுமார் 11 பேர் கடுமையான உடல்நலக்குறைவு அடைந்ததைத் தொடர்ந்து, போலீசார் அந்த நபரை உடனடியாகக் கைது செய்தனர். மாத்திரைகளை ஆய்வு செய்ததில், அதில் எலி விஷத்திற்குப் பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான 'ஜின்க் பாஸ்பைடு' என்ற ரசாயன கலவை கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் பைகுல்லா போலீசார், குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த நபரைக் காவலர்கள் இப்போது இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த மும்பை நகரிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரே ரோடு பகுதியில் உள்ள ரஹ்மதாபாத் மயானம் அருகே அஷுரா ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர். இந்த மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட பிரேம்ஜி, அவர்களிடம் சென்று தன்னிடம் உள்ள மாத்திரைகளை வலிநிவாரணி மாத்திரைகள் என்றும், சோர்வை நீக்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் என்றும் கூறி கொடுத்துள்ளார். அதை உண்மை என்று நம்பி மாத்திரையை உட்கொண்ட பலருக்கும் சில நிமிடங்களிலேயே கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தைக் கடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 11 பேர் இதுபோல பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கிருந்த மூன்று பெண் தன்னார்வலர்களின் நடவடிக்கையே பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. அதாவது சந்தேகத்திற்குரிய வகையில் மாத்திரைகளை வழங்கிய அந்த நபரைத் தடுத்து நிறுத்திய அவர்கள், அவரிடமிருந்த மாத்திரைகளைப் பிடுங்கி உடைத்து பார்த்தபோது, அதனுள் சந்தேகத்திற்கிடமான கருப்பு நிறப் பொடி இருப்பதை கண்டு உடனடியாகப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், ஊர்வலத்தின் ஒலிபெருக்கி மூலம் மக்கள் யாரும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம் என்று தொடர்ந்து எச்சரித்தனர். அவர்களின் இந்த செயல் பெரும் ஆபத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஃபய்யாஸ் பிரேம்ஜியை கைது செய்து, அவரிடமிருந்த சுமார் 14,900 விஷ மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். அதற்கு முன்பாகவே கணிசமான எண்ணிக்கையிலான மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மேலும் 30,000 வெற்று காப்ஸ்யூல்கள் மற்றும் 50 கிலோ பாஸ்பரஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பிபிஏ பட்டதாரியான இவர், ரசாயனங்களை முறைகேடாக வாங்கி இந்த விஷ மாத்திரையை சொந்தமாகத் தயாரித்துள்ளார். ஊர்வலத்தில் பங்கேற்ற சுமார் 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டதாக போலீசாரிடம் அவர் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நபர் ஏற்கனவே ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதில் ஏதேனும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் அல்லது உள்ளூர் சதி கும்பல்களின் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குரூர சதித்திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 'ஜின்க் பாஸ்பைடு' மனித உடலுக்கு மிகவும் ஆபத்தான ஒரு கொடிய விஷம். இதை யாராவது உட்கொண்டால், அது வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினை புரிந்து பாஸ்பைன் என்ற நச்சு வாயுவை உருவாக்குகிறது. இந்த வாயு இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளையை நேரடியாகப் பாதித்து மிகக் குறுகிய காலத்தில் உள் உறுப்புகளை செயலிழக்கச் செய்து உயிரிழப்பை ஏற்படுத்தும்! இதற்குப் பிரத்தியேகமான மாற்று மருந்து எதுவும் கிடையாது என்பதால், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து, வயிற்றைச் சுத்தம் செய்யும் சிகிச்சைகள் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடனேயே காப்பாற்ற முடியும்.விஷ மாத்திரை
என்ன நடந்தது!
சிக்கியது எப்படி
யார் இவர்
ஜின்க் பாஸ்பைடு