மனைவி பிரிந்து சென்றதால் 15,000 பேரை கொல்ல சதி? முஹர்ரம் விஷ மாத்திரை விவகாரம்.. அதிர வைக்கும் தகவல்

  • மும்பை: மும்பை முஹர்ரம் ஊர்வலத்தின் போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு விஷ மாத்திரை கொடுத்துக் கொல்ல முயன்ற விவகாரத்தில் பல அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி, மும்பையின் டோங்ரி பகுதியில் உள்ள ஒரு பட்ஜெட் ஹோட்டல் அறையில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கி, ஆயிரக்கணக்கான விஷ மாத்திரைகளைத் தயாரித்துள்ளார். அவரது வாக்குமூலம் அதிர வைப்பதாக இருக்கிறது.

    Advertisement

    முஹர்ரம் ஊர்வலத்திற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பே டோங்ரியில் உள்ள ஒரு பட்ஜெட் ஹோட்டலில் 39 வயதான ஃபயாஸ் பிரேம்ஜி என்ற நபர் ரூம் போட்டு தங்கியுள்ளார். அங்குத் தங்கியிருந்த போது, ஒரு ஆன்லைன் தளம் மூலமாக 30,000 காலி காப்ஸ்யூல்களையும், எலி விஷமாக பயன்படுத்தப்படும் சுமார் 50 கிலோ துத்தநாக பாஸ்பைடு என்ற நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனத்தையும் ஆர்டர் செய்துள்ளார்.

    Advertisement

    கொலை முயற்சி

    இந்த நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தி, அவர் தனது ஹோட்டல் அறையிலேயே பல நாட்களாக இந்த விஷ மாத்திரைகளைத் தயாரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹோட்டலில் போலீசார் நடத்திய சோதனையின் போது, துத்தநாக பாஸ்பைடு விஷம் நிரப்பப்பட்ட 14,900 காப்ஸ்யூல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேம்ஜி மொத்தம் 30,000 விஷ மாத்திரைகளைத் தயாரித்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    முஹர்ரம் ஊர்வலத்தின் போது சடங்குகளில் ஈடுபடும் மக்களுக்கு இந்த மாத்திரைகளை வலி நிவாரணிகள் என்று கூறி விநியோகிப்பதன் மூலம், சுமார் 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாக அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடமிருந்த மீதமுள்ள கெமிக்கல் மற்றும் பிற பொருட்கள் தடயவியல் பரிசோதனைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    என்ன நடந்தது

    முஹர்ரம் ஊர்வலத்தில் பங்கேற்ற சிலருக்கு இதை வலி நிவாரணி என்று சொல்லி பிரேம்ஜி கொடுத்துள்ளார். அதை நம்பி அவர்களும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இருப்பினும், மாத்திரை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, சிலருக்கு வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆன நிலையில், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், அந்த மாத்திரைகளைப் பற்றி விசாரித்த போதே பிரேம்ஜிக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதன் மூலம் மிகப் பெரிய ஒரு பேரழிவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.. பிரேம்ஜி முன்பு புனேயில் பெயிண்ட் தயாரிக்கும் தொழில் செய்து வந்தவர் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் மும்பைக்குக் குடிபெயர்ந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

    Advertisement

    வெளிநாட்டு தொடர்பு?

    மேலும், அவரது மொபைல் போனை சோதித்த போது, ஈரான் மற்றும் ஈராக் நாடுகளுடன் தொடர்புடைய போன் நம்பர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் இந்த சதித்திட்டத்தில் ஏதேனும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளின் தொடர்புகள் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை, மும்பை காவல்துறை என பல்வேறு அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

    புனேயில் உள்ள பிரேம்ஜியின் குடும்பத்தினரிடமும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். ஆனால், பிரேம்ஜியுடன் தங்களுக்கு நீண்ட நாட்களாக எந்த தொடர்பும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது தந்தை தனியாக வசித்து வருகிறார் என்றும் அவரது தாய், சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் புனேயில் உள்ள மற்றொரு பகுதியில் வசித்து வருகிறார்கள் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    Advertisement

    விட்டு சென்ற மனைவி

    பிரேம்ஜியின் கடந்த கால வாழ்க்கை குறித்த விசாரணையில் சில தனிப்பட்ட தகவல்களும் கிடைத்துள்ளன. அதாவது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரேம்ஜியின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றதாகவும் இதனால் அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் போலீசார் கூறுகிறார்கள். இருப்பினும், அவரது இந்த தனிப்பட்ட சூழ்நிலையே இந்த கொடூரமான குற்றத்திற்குக் காரணமாக இருந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    தற்போது குற்றவாளி மீது கொலை முயற்சி மற்றும் விஷம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வங்கிப் பரிவர்த்தனைகள், செல்போன் உள்ளிட்ட கருவிகளை போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.

    English Summary

    Mumbai Police and ATS investigation on 30,000 poison capsules inside a Dongri budget hotel room to target 15,000 individuals in Moharram (மும்பை முஹர்ரம் விவகாரத்தில் திடீர் திருப்பம்): Mumbai Moharram Plot latest news in tamil.