மும்பை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி மும்பையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு மட்டும் அங்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பாக மிக பெரிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் இந்த விவாகரத்தை பெரிதாக கையில் எடுத்துள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது.
முதற்கட்டமாக ஞானேஷ் குமார் ராஜினாமாவை வலியுறுத்தி மும்பையில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தை அறிவித்திருந்தனர். காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், சிவாஜி பார்க்கில் எந்தவொரு கூட்டத்திற்கும் அனுமதி வழங்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு 2013ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் 2016ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு பிறப்பித்த உத்தரவை போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர். மாற்று இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவாஜி பார்க் பகுதியில் பொதுக்கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். அந்த பகுதி குடியிருப்புகள் நிறைந்த இடமாக இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லும் அவசர வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர். சிவாஜி பார்க் மைதானத்தை பயன்படுத்துவதற்கான மாநகராட்சி அனுமதியும் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை போலீசாரின் இந்த விளக்கத்தை கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே கேள்வி எழுப்பியுள்ளார். 2026ம் ஆண்டு தொடக்கத்தில் சிவாஜி பார்க்கில் நடைபெற்ற ஏக்நாத் ஷிண்டே பங்கேற்ற அரசியல் கூட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஷிண்டேவின் பொதுக்கூட்டம் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ள அவர், "அப்படியானால் ஏக்நாத் ஷிண்டேக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக போலீசார் தற்போது கூறும் நிலையில், அதே இடத்தில் முன்னதாக அரசியல் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருப்பது குறித்தே திப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 2ம் தேதி மும்பையில் இருந்து நாடு தழுவிய போராட்டத்தை தொடங்குவதாக கரப்பான் பூச்சி கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் கூட தங்களது திட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று திப்கே தெரிவித்துள்ளார். அவர் மேலும், "எங்கள் அக்டோபர் 2 போராட்டத்துக்கும் மும்பை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். குடிமக்களின் குரலை ஒடுக்க இதுபோன்ற உத்திகள் ஏற்றுக்கொள்ள முடியாது. போராட்டம் நடத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டால், காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி மும்பையில் பேரணி நடத்துவோம்" என்றார்.ராஜினாமா செய்யணும்!
போலீஸ் விளக்கம்
முக்கிய கேள்வி
பின்னணி