மும்பை: மகாராஷ்டிராவில் தனது கணவருக்கு திருமண உறவில் நாட்டமில்லை. மகனிடம் இருக்கும் இந்த குறையை மறைக்க என்னை சாமியார்களிடம் அழைத்து சென்று கோமியம் குடிக்க வைத்து தொல்லை அளித்ததாக முன்னாள் எம்பி மீது அவரது மருமகள் பரபரப்பான புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் முன்னாள் எம்பி விநாயக் ராவத். இவர் கடந்த 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி சார்பில் ரத்னகிரி - சிந்துதுர்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு சிவசேனா இரண்டாக உடைந்தது.
இதில் விநாயக் ராவத் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணியில் செயல்பட்டு வருகிறார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் விநாயக் ராவத் ரத்னகிரி - சிந்துதுர்க் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரை பாஜக வேட்பாளர் நாராயண் ரானே வீழ்த்தினார். உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணியை முன்னாள் எம்பியான விநாயக் ராவத் மீது தான் அவரது மருமகள் கிரிஜா ராவத் தற்போது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கிரிஜா ராவத், விநாயக் ராவத் மகன் ஜிதேஷ் ராவத்தை திருமணம் செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் கிரிஜா ராவத் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: ''நான் முன்னாள் எம்பி விநாயக் ராவத் மகன் ஜிதேஷ் ராவத்தை திருமணம் செய்தேன். கடந்த சில ஆண்டுகளாக எனக்கு மனதளவிலும், உடலளவிலும் தொல்லைகள் தந்தனர். சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் நபர்களிடம் அழைத்து கொண்டு சித்ரவதை செய்தனர். கோமியம் குடிக்க வைத்தனர். என்னுடைய தலைமுடியை பிடுங்கி பூஜை செய்தனர். எனது கணவருக்கு இல்லற வாழ்க்கையில் நாட்டம் இல்லை. ஆனால் அதனை மறைக்க கொங்கன் பிராந்தியத்தில் உள்ள சாமியார்களிடம் என்னை அழைத்து சென்று துன்புறுத்தினர். முடிந்தவரை பிரச்சனையை தீர்க்க நான் முயன்றேன். ஆனால் அது நடக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். '' என்று கூறியிருந்தார். கிரிஜா ராவத் அளித்த புகாரின் பேரில் கணவர் ஜிதேஷ் ராவத், மாமனாரும், முன்னாள் எம்பியான விநாயக் ராவத், சாமியார்கள் என்று சொல்லிக்கொண்ட 2 மாந்திரீகர்களான ஃபிரோஸ் பாபா, காசி பாபா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பில்லி - சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்பு சட்டம் 2013ன் கீழ் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை முன்னாள் எம்பியும், மாமனாருமான விநாயக் ராவத் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ''இந்த சம்பவங்கள் கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டிற்குள் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அப்போதே புகார் அளித்து இருக்கலாம். ஆனால் தற்போது ஜீவனாம்சம் கோரும் நடவடிக்கை தொடங்கிய பிறகே புகார் அளித்துள்ளார். இதில் உள்நோக்கம் உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை'' என்று கூறியுள்ளார்.