மும்பை: நாடு முழுவதையும் உலுக்கிய 2024ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், முதன்மை குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட Kingpin என்ற பெயரில் அழைக்கப்பட்ட சஞ்சீவ் முகியா விடுதலை செய்யப்பட்டு உள்ளார். இவர் தவறு எதுவும் செய்யவில்லை என்று சிபிஐ (CBI) தற்போது முழுமையான கிளீன் சிட் வழங்கியுள்ளது.
இந்த வினாத்தாள் திருட்டு மற்றும் விநியோகத்தில் சஞ்சீவ் முகியாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை உறுதிசெய்து சிபிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தை முதன்முதலில் பிகார் மாநில காவல்துறை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்தது. அந்த சமயத்தில், ஏற்கனவே பல்வேறு தேர்வு வினாத்தாள் கசிவு வழக்குகளில் தொடர்புடையவராக இருந்த சஞ்சீவ் முகியா மீது பிகார் காவல்துறைக்கு பலத்த சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, பிகார் காவல்துறை பதிந்த முதல் தகவல் அறிக்கையில் சஞ்சீவ் முகியாவின் பெயர் முதல் நபராகச் சேர்க்கப்பட்டது. அவர் இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்டிருக்கலாம் என தொடக்கத்தில் கருதப்பட்டது. வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விசாரணை பிகார் காவல்துறையிடமிருந்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணையில் இறங்கிய சிபிஐ அதிகாரிகள், வினாத்தாள் திருடப்பட்ட விதம், அதனை யார் யாருக்கு விநியோகித்தார்கள் மற்றும் இதன் மூலம் பலனடைந்த நபர்கள் என அனைத்துத் தரப்பினரையும் மிகத் துல்லியமாகக் கண்டறிந்தனர். இந்த வழக்கின் முழுமையான விசாரணையின் அடிப்படையில், பாட்னா நீதிமன்றத்தில் 45 நபர்களுக்கு எதிராக சிபிஐ பல்வேறு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தது. இருப்பினும், சஞ்சீவ் முகியா குறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "நீட் வினாத்தாள் திருடப்பட்டதிலோ அல்லது அது பரப்பப்பட்டதிலோ சஞ்சீவ் குமார் என்ற சஞ்சீவ் முகியாவுக்கு எந்தவித தொடர்பும் இருப்பதற்கான சான்றுகளோ, ஆதாரங்களோ விசாரணையின் போது கிடைக்கவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார். நீட் வழக்கு தீவிரமடைந்த காலகட்டத்தில் சஞ்சீவ் முகியா தலைமறைவாக இருந்தார். பின்னர் பிகார் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். அவர் எஃப்.ஐ.ஆரில் பெயர் குறிப்பிடப்பட்ட நபராக இருந்ததால், நீட் வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்தது. சிபிஐயின் தீவிர விசாரணையில் சஞ்சீவ் முகியாவுக்கு நீட் வினாத்தாள் கசிவில் எந்தப் பங்கும் இல்லை என்பது உறுதியானது. இதனால், அவருக்கு எதிராக சிபிஐ எந்தக் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்யவில்லை. இதைப் பயன்படுத்தி, நீட் வினாத்தாள் கசிவு வழக்கிலிருந்து சஞ்சீவ் முகியா ஜாமீன் பெற்றார். நீட் வினாத்தாள் வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும், பிகார் காவல்துறை விசாரித்து வரும் வேறு சில தேர்வு முறைகேடு வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டவராக இருப்பதால், அவர் தொடர்ந்து நீதித்துறை காவலில் சிறையிலேயே இருக்கிறார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சதித்திட்டத்தில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் சிபிஐ வெற்றிகரமாக அடையாள கண்டுள்ளதாகவும், சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதை உறுதி செய்துள்ளதாகவும் சிபிஐ தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.பிகார் காவல்துறையின் விசாரணை
சிபிஐ விசாரணை மற்றும் உண்மை வெளிப்பாடு
தலைமறைவும் கைதும்
குற்ற வழக்குகளில் சிறைவாசம்