மும்பை: பீகாரில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் வென்ற பிரசாந்த் கிஷோர் இப்போது மீண்டும் தேசியளவில் கவனிக்கப்படும் ஒரு தலைவராக மாறிவிட்டார். இதற்கிடையே கடந்த சில நாட்களில் மகாராஷ்டிராவில் முக்கிய அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் பிரசாந்த் கிஷோர். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
பீகாரில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாங்கிபூரில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜகவின் வலுவான கோட்டையான பாங்கிபூரில் பிரசாந்த் கிஷோர் வென்றது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த பாங்கிபூர் என்பது பாஜகவின் தேசிய தலைவரான நிதின் நபீனின் சொந்த தொகுதியாகும். அவரது ராஜினாமாவை தொடர்ந்தே இடைத்தேர்தல் நடந்தது. அதில் பிரசாந்த் கிஷோர் தோல்வி அடைந்தது தான் பலருக்கும் மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இந்தச் சூழலில் தான் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான சுப்ரியா சுலேவை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியிருக்கிறார். பிரசாந்த் கிஷோர் தன்னுடைய நீண்டகால நண்பர் என்றும் அதன் அடிப்படையிலேயே அவரை சந்தித்தாக சுப்ரியா சுலே தெரிவித்தார். அதேநேரம் அவர் யாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு என்றும் சுப்ரியா சுலே கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாராமதி எம்.பி. சுப்ரியா சுலே, "பிரசாந்த் கிஷோர் பல ஆண்டுகளாக தனது நல்ல நண்பர்.. அவரது பணிகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இருவருக்கும் இடையேயான நட்பை நான் ஒருபோதும் மறைத்ததில்லை. அதே நேரத்தில், பிரசாந்த் கிஷோர் தொழில் ரீதியாக யாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். அஜித் பவாரின் என்சிபி உடன் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறதா இல்லையா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்" என்றார். இந்த வார தொடக்கத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வரான சுனேத்ரா பவாரை பிரசாந்த் கிஷோர் சந்தித்திருந்தார். சுனேத்ரா பவார் தான் அஜித் பவார் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் அவரது மகனும் எம்பியுமான பார்த்த் பவாரையும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சந்திப்பை தொடர்ந்தே அஜித் பவார் டீமுடன் இணைந்து பிரசாந்த் கிஷோர் செயல்பட போவதாக பேச்சுகள் எழுந்தன. அதற்கு தான் சுப்ரியா சுலே இதுபோன்ற பதிலை கொடுத்துள்ளார். இதற்கிடையே பீகாரில் பிரசாந்த் கிஷோரின் அரசியல் பணிகளையும் சுப்ரியா சுலே பாராட்டினார். பாங்கிபூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜகவின் அரசியல் இயந்திரத்தை எதிர்கொண்டு அவர் மிகப்பெரிய போரில் வெற்றியை பெற்றுள்ளதாக சுப்ரியா சுலே குறிப்பிட்டார். மேலும், பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின் வாக்காளராக இருக்கும் வாக்குச்சாவடியிலேயே கூட பாஜகவை விட பிரசாந்த் கிஷோர் அதிக வாக்குகளை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சுப்ரியா சுலே மேலும் கூறுகையில், "இந்த சூழ்நிலையில் பிரசாந்த் கிஷோரை நாம் பாராட்ட வேண்டும். அவர் கடினமாக உழைக்கிறார். பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். உள்ளாட்சி முதல் டெல்லி வரை தங்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், பாஜகவால் வெல்ல முடியவில்லை.. ஏதோ தீவிரமான பிரச்சினை ஆரம்பித்துவிட்டதையே இது காட்டுகிறது" என்றார். பிரசாந்த் கிஷோர் தேசியளவில் முக்கியமான நபராகவே வலம் வந்து கொண்டு இருந்தார். கடந்தாண்டு பீகார் தேர்தலில் அவரது அரசியல் கட்சி எந்தவொரு தொகுதியிலும் வெல்லாமல் படுதோல்வி அடைந்திருந்தது. அதன் பிறகு சில காலம் அவரை பற்றி பெரியளவில் செய்திகள் வெளியாகாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் அவர் முக்கிய தலைவராக உருவெடுத்திருக்கிறார்.சந்திப்பு
பின்னணி
பீகார்
பிரசாந்த் கிஷோர்