திருமணத்திற்கு முன் துப்பறியும் மணமக்கள்.. கேதன் அகர்வால் வழக்குப் பிறகு விசித்திரமான கோரிக்கைகள்

  • மும்பை: புனேவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்கு கணவராக நிச்சயக்கப்பட்ட கேதன் அகர்வாலை, புனேவின் புகழ்பெற்ற லோஹகாட் கோட்டையில் உள்ள 'சியா பாயிண்ட்' என்ற இடத்தில் இருந்து தள்ளிக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மகாராஷ்டிரா முழுவதும் திருமணத்திற்கு முந்தைய பின்னணிச் சோதனைகளுக்கான விசாரணைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக மும்பையில் உள்ள தனியார் புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளன.

    Advertisement

    இதற்கான துல்லியமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என்றாலும், திருமணத்திற்கு முந்தைய விசாரணைகள் தற்போது மிகச் சாதாரணமாகி விட்டதாகத் துப்பறியும் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.

    Advertisement

    திருமணத்தை பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் போது, அவர்களது பின்னணியை விசாரிக்காமல் திருமணம் செய்வது முன்பு சாதாரணமாக இருந்தது. ஆனால் அதனால் பின் விளைவுகள் பெரிய அளவில் இருந்தது. சரியாக விசாரிக்காமல் திருமணம் செய்வர்கள் வாழ்க்கை மோசமான நிலைக்கு போகிறது. காலத்திற்கும் வருந்தும் நிலை ஏற்படுகிறது.

    எனவே இப்போதெல்லாம் குடும்பங்கள் திருமணத்திற்கு முன்பு அவர்களது உறவினர்களைச் சந்திப்பது, வேலை விவரம் கேட்பது மற்றும் ஜாதகம் பார்ப்பதோடு மட்டும் திருப்தியடைவதில்லை; உண்மைகளையும் சரிபார்க்க விரும்புகிறார்கள். இணையக் குற்றங்கள் மற்றும் சொத்துப் பிரச்சனைகள் அதிகம் உள்ள மும்பையில்கூட, இந்தத் திருமண பின்னணிச் சோதனைகளே துப்பறியும் நிறுவனங்களின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளன.

    Advertisement

    புனேவின் லோஹகாட் சம்பவத்திற்குப் பிறகு, திருமணத்திற்கு முந்தைய பின்னணிச் சோதனைகளுக்கான கோரிக்கைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளது. மணமகனோ அல்லது மணமகளோ மறைக்கப்பட்ட பழைய காதல் தொடர்புகளை வைத்திருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ளக் குடும்பத்தினர் விரும்புகிறார்கள்" என்று மும்பையைச் சேர்ந்த ஒரு துப்பறியும் ஏஜென்சி ஊழியர் தெரிவித்துள்ளார்.

    எப்படி எல்லாம் கேட்கிறார்கள்

    பழைய கல்லூரி நட்பு: நிச்சயிக்கப்பட்ட மணமகள், தன் பழைய கல்லூரி நண்பருடன் இப்போதும் நட்பாக இருப்பதை அறிந்த குடும்பத்தினர், அது சாதாரண நட்புதான் என்று அந்தப் பெண் விளக்கியும் திருமணத்தை நிறுத்தி விட்டார்கள்.

    பணிக்குச் செல்லும் போது உடன் பயணம்: குஜராத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், மணமகன் தன் பெண் சக ஊழியருடன் தினமும் ஒரே காரில் வேலைக்குச் சென்று வந்ததைக் கண்டு, வேறு எந்தத் தவறான உறவும் இல்லை என்றபோதிலும் திருமணப் பேச்சை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

    Advertisement

    மறைக்கப்பட்ட கடன்கள்: மணமகன் அதிக கடன் சுமையிலும், சட்டப் பிரச்சனைகளிலும் இருப்பதை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்ததை அடுத்து, மும்பையைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்கள் மகளின் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்திருக்கிறார்கள்.

    பொய்யான தகுதிகள்: மணமகளின் கல்வித் தகுதி மற்றும் வேலை அனுபவத்தில் முரண்பாடுகள் இருந்ததால், மணமகன் வீட்டார் பின்வாங்கியிருக்கிறார்கள்

    அச்சத்தை ஏற்படுத்திய கொலைச் சம்பவங்கள்: புனே தொழில் அதிபர் கேதன் அகர்வாலின் மரணம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் நடந்த சில அதிர்ச்சி சம்பவங்களும் இந்த அச்சத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி மேகாலயாவில் தனது தேனிலவின் போது 2025ம் ஆண்டு கொல்லப்பட்டிருக்கிறார். இதில் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷியே கூலிப்படையை ஏவிக்கொன்றதாகக் காவல்துறை குற்றம் சாட்டி உள்ளது. பீகாரில் புதிதாகத் திருமணமான ஒரு பெண், திருமணமாகி 45 நாட்களிலேயே கணவரைக் கொல்லத் திட்டமிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    இதுபற்றி தனியார் துப்பறியும் ஏஜென்சி இயக்குனர் ஒருவர் கூறுகையில், "முன்பெல்லாம் சந்தேகம் இருந்தால் மட்டுமே மக்கள் எங்களை அணுகுவார்கள். ஆனால் இப்போது எல்லாம் இயல்பாகத் தெரிந்தாலும், எந்தச் சிக்கலும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள பின்னணிச் சோதனையைக் கேட்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

    விசித்திரக் கோரிக்கைகள்

    ஸ்ட்ராடஜிக் அசைன்மென்ட் அண்ட் இன்டலிஜென்ஸ் பீரோவைச் சேர்ந்த தர்ஷன் ஷா கூறுகையில், "கடந்த சில மாதங்களாக விசித்திரமான விசாரணைகள் அதிகரித்துள்ளன. வழக்கமான வேலை, சம்பளம், குற்றப் பின்னணி, பொருளாதார நிலை ஆகியவற்றைத் தாண்டி, சில குடும்பங்கள் தொலைபேசி அழைப்பு விவரங்கள், தனிப்பட்ட செய்திகள் அல்லது மின்னஞ்சல்களைக் கேட்கிறார்கள். ஆனால் இவற்றைச் சேகரிப்பது சட்டப்படி குற்றம்" என்றார்.

    Advertisement

    மணமகன் ஓரினசேர்க்கையாளரா, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளாரா, முன்பே திருமணமானவரா, மது/நடன விடுதிகளுக்குச் செல்லும் பழக்கம் உள்ளவரா என்றும் சில குடும்பங்கள் ஆராய்கின்றன.

    இணையவழித் திருமணங்களும் சட்ட எச்சரிக்கை

    மேட்ரிமோனியல் வலைத்தளங்கள் மற்றும் டேட்டிங் செயலிகளின் பயன்பாடு அதிகரித்ததே இதற்குக் முக்கியக் காரணம் என்று இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். வழக்கமான திருமணங்களில் உறவினர்கள் மூலம் ஒருவரையொருவர் அறிந்திருப்பார்கள், ஆனால் இணைய வழியில் அடையாளம் தெரியாத நபர்களே இணைகிறார்கள். ஆனால் ஆவணங்களைச் சரிபார்ப்பது, சட்டப்பூர்வமாக விசாரிப்பது மற்றும் ஒப்புதலுடன் கூடிய சரிபார்ப்பு மட்டுமே சட்டப்படி செல்லுபடியாகும் என சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    தனிப்பட்ட குறுஞ்செய்திகளைப் பார்ப்பது, ரகசிய அழைப்பு விவரங்களை எடுப்பது அல்லது சமூக வலைத்தளங்களைக் ஹேக் செய்வது சட்டவிரோதமானது என்றும் சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியும் வழக்கறிஞருமான வை.பி.சிங் கூறுகையில், "ஒருவரைப் பற்றிய பொதுவான பின்னணிச் சோதனையை ரகசியமாகச் செய்வதில் குற்றமில்லை. ஆனால், ஒருவரைத் தொடர்ந்து பின்தொடர்வது அல்லது நோட்டமிடுவது 1932-ஆம் ஆண்டின் குற்றவியல் சட்டத் திருத்தப் பிரிவு 7-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம்" என்று எச்சரித்துள்ளார்.

    English Summary

    Prospective couples turning sleuths before marriage: Bizarre requests following the pune Ketan Agarwal case