மும்பை: ''கண்டிப்பாக 2வது திருமணம் செய்து நன்றாக வாழ்க்கை வாழ வேண்டும்'' என்று கடிதம் எழுதிவிட்டு 33 வயது நிரம்பிய பெண் ஒருவர் தனது 6 வயது மகனுடன் 18 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிம்ப்ரி - சிஞ்ச்வாத் பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் பங்கடே. இவரது மனைவி பெயர் ஏக்தா பாங்கடே (வயது 33). இந்த தம்பதிக்கு 6 வயதில் மனோஜ் என்ற மகன் இருந்தான். ராஜஸ்தானை சேர்ந்த இவர்கள் வேலைக்காக அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 7 வது மாடியில் வசித்தனர். மனோஜ் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மனோஜ் நேற்று வழக்கம்போல் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றார். வீட்டில் ஏக்தா பாங்கத் தனது மகன் மனோஜ் உடன் இருந்தார். மாலை 6.30 மணியளவில் திடீரென்று ஏக்தா தனது மகன் மனோஜ் உடன் 18 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தார். இதில் தாயும், மகனும் பலியாகினர். இவர்கள் 18 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுபற்றி உடனடியாக வாகத் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 8 பக்கங்களில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அதில் அவர் உருக்கமாக எழுதியிருந்தார். அதில், தனக்கும், கணவருக்கும் இடையேயான உறவு எப்படி இருந்தது? குடும்பத்தினருடன் இருந்த பந்தம் பற்றி அவர் உருக்கமாக எழுதியிருந்தார். அதேபோல் தனது மகனின் எதிர்காலம் பற்றிய கவலை தன்னிடம் இருந்ததாகவும், நான் இல்லாமல் மகன் எப்படி வளர்வான்? என்பது பற்றிய கவலை உள்ளதால் அவனையும் அழைத்து செல்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தனது தற்கொலை முடிவுக்கு நான் மட்டுமே காரணம். எனது கணவர் 2வது திருமணம் செய்து அவரது வாழ்க்கையை நன்றாக அமைத்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் போலீசார் தற்கொலையின் பின்னணி பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் க்தாவிற்கு உடல்நல பிரச்சனை இருந்து வந்துள்ளது. முதுகுவலியால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு முதுகுவலி குணமாகவில்லை. என்று கூறப்படுகிறது. இதனால் இந்த உடல்நல பிரச்சனையால் மனம் நொந்து அவர் தற்கொலை செய்து இருக்கலாம், அதுமட்டுமின்றி தான் இல்லாமல் மகன் கஷ்டப்படுவானோ என்று நினைத்து அவனுடன் சேர்ந்து 18 வது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏக்தா வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.