டெல்லி: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இளைஞர்கள் குறித்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. கேள்வி கேட்கும் இன்றைய இளைஞர்களுக்கு விடைகளை தர வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை மூலமாகவே அவர்களை நல்ல வழியில் அழைத்து செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'தற்கால தாய்மை' என்ற தலைப்பில் நடைபெற்ற நடந்த விழிப்புணர்வு மாநாடு ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். இன்றைய இளைஞர்களின் மனநிலை வித்தியாசமாக இருப்பதாக தெரிவித்த அவர், இதை புரிந்துகொண்டு அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டுமே தவிர மோதல் போக்கு இருக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும், "நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடப்போம். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிய தலைமுறையினர் எல்லாவற்றையும் கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு ஏன் என்று விளக்கிச் சொல்ல வேண்டும். அவர்கள் மீது அதிக அன்பு காட்ட வேண்டும். அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். தொடர்ந்து பேச வேண்டும். ஆனால், இப்போது குடும்பங்களுக்கு உள்ளேயே உரையாடல் குறைந்து வருகிறது" என்றார். நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மோகன் பகவத் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. மோகன் பகவத் தனது பேச்சில் நேரடியாக மாணவர் போராட்டத்தை பற்றி பேசவில்லை என்ற போதிலும், மாணவர்கள் கேள்வி கேட்பார்கள்.. நாம் தான் பொறுமையாக அதற்கு பதிலளிக்க வேண்டும் என நீட் போராட்டம் தொடர்பாகவே பேசினார். தாய்மை குறித்த அந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசுகையில், "மனித நாகரிகத்தின் அடித்தளமே தாய்மை தான். ஒரு குழந்தையை உருவாக்குவதும், வளர்ப்பதும், வாழ வைப்பதும் தாய்மையால் மட்டுமே சாத்தியம். ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய் தான். வாழ்நாள் முழுவதும் குழந்தைக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவரும் தாய் தான். மனிதர்களுக்கு சிந்திக்கும் திறன் இயற்கையாக இருந்தாலும், அந்த சிந்தனையை சரியான பாதையில் வழிநடத்துவது தாய்மார்கள்தான். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர்கள் பொறுமையாக பதிலளிக்க வேண்டும் என்றும்.. இதற்கு அவர்கள் தங்கள் அறிவையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் நாம் சொல்லிக் கொடுப்பதை விட, நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை பார்த்து தான் அவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்" என்றார். குடும்ப உறவுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திய அவர், "ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், குடும்ப உறுப்பினர்களுக்குள் உரையாடல் குறைந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து சில தவறான புரிதல்கள் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்திய கலாச்சாரத்தின் அடையாளம். நமது பாரம்பரியம், அறிவு, வரலாறு ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்" என்றார். இதற்கிடையில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு, இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது, தேசிய தேர்வு முகமை செயல்பாடுகளில் சீர்திருத்தம் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இருப்பினும், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.நீட் போராட்டம்
தாய்
முன்மாதிரி
நிறைய பேசுங்கள்