பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர்

  • மும்பை: இன்று இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான தகவல் தொழில்நுட்ப மற்றும் சேவைத் துறை வல்லுநர்கள், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளின் வணிக நேரத்திற்கு ஏற்ப தங்கள் அன்றாட வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளனர். பகலை இரவாக்கி, இரவைப் பகலாக்கி அவர்கள் பார்க்கும் இந்த நள்ளிரவுப் பணி, அவர்களுக்குக் கைநிறையச் சம்பளத்தையும் உலகளாவிய அங்கீகாரத்தையும் தந்தாலும், அதற்குப் பின்னால் அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம் என்பதை ஒரு புனே இளைஞரின் சமூக வலைத்தளப் பதிவு தற்போது உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

    Advertisement

    புனேவைச் சேர்ந்த சாயக் ராய் என்ற மென்பொறியாளர், இந்தியாவிலிருந்து இரவு 7:30 மணி முதல் அதிகாலை 4:30 மணி வரை அமெரிக்க நேரத்திற்கு வேலை பார்ப்பதில் உள்ள நிறைகளையும், அதனால் உடல் மற்றும் மன ரீதியாக எதிர்கொள்ளும் கொடூரமான குறைகளையும் பட்டியலிட்டு ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவரது பதிவினை அப்படியே பார்ப்போம்.

    Advertisement

    "என் பெயர் சாயக் ராய், நான் புனேவில் வசித்து வருகிறேன். நம் ஊரில் இருந்துகொண்டே அமெரிக்க நேரத்திற்கு (US Shift) வேலை பார்ப்பது என்பது பலருக்கும் ஒரு கனவாக, ஒரு ஃபேன்ஸியான விஷயமாகத் தெரியலாம். ஆனால், தினமும் இரவு 7:30 மணி முதல் அதிகாலை 4:30 மணி வரை கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கும் ஒருவனுடைய நிஜ வாழ்க்கை எப்படி இருக்கும்? அதன் நிறைகள் என்ன? குறைகள் என்ன? என்பதைப் பற்றி என் அனுபவத்திலிருந்து என் மனதில் பட்டதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

    Advertisement

    இந்த வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த நல்ல விஷயங்கள்..

    முதலில், இந்த வேலை எனக்குக் கொடுத்த பாசிட்டிவ் விஷயங்களைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

    பணமும் அலவன்ஸும்: பகல் வேலையை விட இந்த நைட் ஷிஃப்ட் வேலைக்குச் சம்பளம் எப்போதுமே அதிகம். அதோடு கைநிறைய 'நைட் ஷிஃப்ட் அலவன்ஸ்' தனி.

    அருமையான கார்ப்பரேட் கலாச்சாரம்: நான் வேலை பார்க்கும் அமெரிக்கக் குழுவில் உள்ளவர்கள் மிகவும் கனிவானவர்கள், மனிதநேயம் மிக்கவர்கள். 4:30 மணிக்கு லாக்-அவுட் செய்துவிட்டால், அதற்குப் பிறகு எக்காரணம் கொண்டும் உங்களை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். 'ஒர்க்-லைஃப் பேலன்ஸ்' (Work-Life Balance) மிகச் சரியாக இருக்கும்.

    Advertisement

    சர்வதேச அனுபவம்: வெளிநாட்டு வாடிக்கையாளர்களோடு நேரடியாகப் பேசுவதால், நம்முடைய தகவல் தொடர்புத் திறனும் (Communication) உலகளாவிய தொழில்முறை அறிவும் அசுர வேகத்தில் வளரும்.

    பகலில் கிடைக்கும் சுதந்திரம்: பேங்க் வேலை, அரசு அலுவலக வேலைகள் அல்லது நமக்குப் பிடித்த தனிப்பட்ட விஷயங்களை முடிக்கப் பகல் முழுக்க நேரம் இருக்கும். ஆபீஸ் லீவ் போட வேண்டிய அவசியமே இல்லை.

    திங்கள் கிழமை பயம் இல்லை (No Monday Blues): ஞாயிறு இரவு தூங்கிவிட்டு, திங்கள் காலை அவசர அவசரமாக ஆபீசுக்கு ஓட வேண்டிய நரகம் எனக்கு இல்லை. எனக்குத் திங்கள் கிழமை மாலையில்தான் வேலையே ஆரம்பிக்கும்!

    Advertisement

    ஆனால், நான் கொடுத்த விலை ரொம்ப அதிகம்:

    பணம், நல்ல கலாச்சாரம் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இதற்காக என் உடம்பும் மனசும் கொடுத்த விலை மிக மிக அதிகம் நண்பர்களே. அதை யாராலும் மறுக்க முடியாது.

    சிதைந்துபோன தூக்கம்: பகலில் எவ்வளவுதான் கதவைச் சாத்திவிட்டுத் தூங்கினாலும், அந்தத் தூக்கத்தின் தரம் இரவுக்கு ஈடாகாது. நாம் தூங்கும்போது இந்த உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும். தெருவில் போகும் வண்டிகளின் சத்தம், காய்கறி விற்பவர்களின் சத்தம் எனத் தூக்கம் கலைந்துகொண்டே இருக்கும்.

    உடல்நலக் கேடு: இயற்கை விதிக்கு மாறாக இரவில் விழித்திருப்பதால், மிகக் குறுகிய காலத்திலேயே உடல் பருமன் மற்றும் கடுமையான செரிமானப் பிரச்சனைகள் வந்துவிடுகின்றன. கண் எரிச்சலும், உடல் சோர்வும் நிரந்தரத் துணையாகிவிடும்.

    Advertisement

    தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை: ஊரே தூங்கும்போது நாம் வேலை பார்ப்போம், ஊரே முழித்திருக்கும் போது நாம் தூங்குவோம். இதனால் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரோடு நேரம் செலவிட முடிவதே இல்லை. உறவுகளுக்குள் விரிசல் விழ இதுவே முதன்மைக் காரணமாக இருக்கிறது.

    மன உளைச்சல்: போதிய தூக்கமின்மையால் மன அழுத்தம் , திடீர் கோபம், மூட் ஸ்விங்ஸ் (Mood swings) போன்ற மனநலப் பிரச்சனைகள் மிக சாதாரணமாக வந்துவிடுகின்றன. பகலில் வெளியில் போய் ஓடி விளையாடவோ, உடற்பயிற்சி செய்யவோ கூடப் போதிய எனர்ஜி இருக்காது. ஒரு கட்டத்தில் வாழ்க்கை முழுக்க ரோபோ போல ஓடிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு வந்துவிடும்" இவ்வாறு கூறியிருந்தார்,

    புனே நெட்டிசனின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கொடுத்த கமெண்டுகளை பார்ப்போம்.

    இவரை போலவே நைட் ஷிஃப்ட் பார்த்துப் பழகிய மற்றும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் தங்களின் மனக் குமுறல்களையும் கருத்துக்களையும் கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.

    ஐந்து வருட அனுபவமுள்ள ஒருவர் வெளியிட்ட பதிவில், "நான் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன அத்தனை நன்மைகளும், தீமைகளும் நூறு சதவீதம் உண்மை தோழா! இதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே இந்த வலி புரியும்." என்று கூறியுள்ளார்.

    இரவு நேரத்தில் வேலை செய்வர்களுக்கு ஆதரவாக நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "யார் அமைதியை விரும்புகிறார்களோ, யாருக்கு இரவில் தனியாக வேலை செய்யப் பிடிக்குமோ... அவர்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு வரம்!" என்று கூறியுள்ளார்.

    வேலை தேடுபவர்களின் ஆதங்கம் பற்றியும் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். அதில் "வேலையில்லாமல் இருப்பதற்கு இந்த நரகமாவது பரவாயில்லை என்றுதான் பலர் இதில் சேருகிறார்கள். நல்ல கம்பெனி அமைந்தால் மட்டுமே இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியும்." என்று கூறியுள்ளார்.

    நிஜத்தை உடைத்து நெட்டிசன் ஒருவர் கூறுகையில் "இதில் பெருமைப்பட எதுவுமே இல்லை! ஒரு வருடம் மட்டும் இந்த ஷிஃப்ட்டில் வேலை பாருங்கள், உங்கள் உடம்பு மொத்தமாகக் கெட்டுப்போய்விடும். எனக்கு பகல் ஷிஃப்ட்டில் கம்மி சம்பளம் கிடைத்தாலும் பரவாயில்லை, இந்த அமெரிக்க ஷிஃப்ட் வேண்டவே வேண்டாம். உடல்நலனை விடப் பணம் பெரிதல்ல!" என்று கூறியுள்ளார்.

    அதேபோல் ஒரு நெட்டிசன் "தயவுசெய்து இந்த நைட் ஷிஃப்ட் கலாச்சாரத்தை ஒரு சாதாரண விஷயமாக மாற்றாதீர்கள். இது ஒரு மனிதனை நடைப்பிணமாக மாற்றும் வாழ்க்கை. இதற்கு நான் வேலையில்லாமல் கூட இருந்துவிடுவேன், ஆனால் இந்த ஷிஃப்ட்டை மட்டும் எடுக்க மாட்டேன்." என்று கூறியுள்ளார்.

    English Summary

    Sayak Roy, a software engineer based in Pune, has shared a video listing the benefits—as well as the severe physical and mental drawbacks—of working U.S. hours from India, specifically from 7:30 PM to 4:30 AM. Let's take a look at his post in its entirety