மும்பை: மகாராஷ்டிராவின் நான்டெட் சாஹிப் பகுதியில் உள்ள குருத்வாராவில் பஞ்சாப் மாஜி முதல்வரும் சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர் சிங் பாதல் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் பிரதான பிராந்திய கட்சியாக இருப்பது சிரோமணி அகாலி தளம். இந்த கட்சியின் தலைவராக இருப்பவர் சுக்பீர் சிங் பாதல்! இவர் கடந்த 2009 முதல் 2017 வரை பஞ்சாப் மாநிலத்தின் துணை முதல்வராக இருந்துள்ளார்.
இவர் மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் சாஹிப் பகுதியில் உள்ள குருத்வாராவிற்கு வந்திருந்த நிலையில், அவர் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குருத்வாரா வளாகத்தில் நடந்த இந்த தாக்குதல் தொடர்பான முழுமையான விவரங்கள், தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை செய்திகள் வெளியாகவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது பெயர் உள்ளிட்ட இதர விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. முன்னாள் பஞ்சாப் முதல்வர் மறைந்த பிரகாஷ் சிங் பாதலின் மகனான இவர், பஞ்சாப் அரசியலில் முக்கியமான தலைவராக இருந்து வருகிறார். அதேநேரம் சுக்பீர் பாதல் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. 2024 டிசம்பரில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் வளாகத்தில் மத சேவையில் ஈடுபட்டிருந்தபோது, அவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்றார். பாதுகாப்புப் பணியில் இருந்த ஒருவர் உடனடியாக தலையிட்டதால் அவர் காயமின்றி தப்பியது குறிப்பிடத்தக்கது.