இது சட்டப்படி செல்லாது.. சந்திரசேகரன் பதவி நீட்டிப்புக்கு டாடா டிரஸ்ட்ஸ் எதிர்ப்பு.. என்ன காரணம்!

  • மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு எடுத்த முடிவுக்கு டாடா டிரஸ்ட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த முடிவு நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் சட்டரீதியாகச் செல்லாது என்றும் டாடா டிரஸ்ட்ஸ் தெரிவித்துள்ளது.

    Advertisement

    டாடா டிரஸ்ட்ஸ் தலைவரான நோயல் டாடா, சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நியமிக்கும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார். அதே நேரத்தில், இயக்குநர் குழுவில் இருந்த மற்ற 4 இயக்குநர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். டாடா சன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு இதுபோல ஒரு குழப்பம் வெடித்திருக்கிறது.

    Advertisement

    டாடா டிரஸ்ட்

    இதற்கிடையே இது தொடர்பாக டாடா டிரஸ்ட்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை மீண்டும் நியமிக்கும் தீர்மானம் சட்டவிரோதமானது என டாடா டிரஸ்ட்ஸ் கருதுகிறது. இன்று நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் என். சந்திரசேகரனை மீண்டும் நியமிக்கும் தீர்மானத்துக்கு 4 இயக்குநர்கள் ஆதரவாகவும், நோயல் டாடா எதிராகவும் வாக்களித்தனர்.

    ஆனால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிகளை கருத்தில் கொள்ளும்போது இந்த தீர்மானம் சட்ட ரீதியாக செல்லாது" என டாடா டிரஸ்ட்ஸ் கூறியுள்ளது. இதனால் டாடா குழுமத்தின் தலைமை தொடர்பாக ஏற்கனவே நிலவி வந்த கருத்து வேறுபாடு தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.

    Advertisement

    என்ன நடந்தது!

    டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு வியாழக்கிழமை கூடி, சந்திரசேகரன் மேலும் 5 ஆண்டுகள் செயல் தலைவர் பதவியில் நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அத்தோடு டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட உள்ளன. டாடா டிரஸ்ட் நிறுவனத்திற்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் ரிசர்வ் வங்கியின் விதிகளால் வேறு வழியின்றி பட்டியலிட வேண்டி இருக்கிறது.

    பங்குச்சந்தை பட்டியலிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய இந்த நேரத்தில் சந்திரசேகரனின் தலைமை தொடர்வதே சரியாக இருக்கும் என டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநர் குழு கருதுகிறது. இதன் காரணமாகவே அவரது பதவியை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டியலிடும் முடிவுக்கும் டாடா டிரஸ்ட் ஆதரவாக இல்லை. சந்திரசேகரன் பதவியில் நீடிப்பதையும் டாடா டிரஸ் விரும்பவில்லை என்பதையே இந்த அறிக்கை காட்டுகிறது.

    Advertisement

    பின்னணி

    டாடா சன்ஸ் நிறுவனத்தை வங்கி சாரா நிதி நிறுவனமாக அதாவது NBFCஆக ரிசர்வ் வங்கி வகைப்படுத்தியிருந்தது. அப்படி வகைப்படுத்தினால் கட்டாயம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும். பங்குச்சந்தை பட்டியலை தவிர்ப்பதற்காக டாடா சன்ஸ் நிறுவனம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, ரூ.21,000 கோடிக்கும் அதிகமான கடனை திருப்பிச் செலுத்தியிருந்தது.

    காரணம்

    மேலும், டாடா சன்ஸ் நிறுவனத்தை வங்கி சாரா நிதி நிறுவனமாக கருதக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், அந்த விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கி கடந்த வாரம் நிராகரித்தது. இதனால் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய சூழல் மீண்டும் உருவாகியுள்ளது. இந்த சூழலில் தான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் மாற்றம் கொண்டு வர இயக்குநர் குழு விரும்பவில்லை

    English Summary

    Tata Sons’ board has approved a five-year extension for chairman N. Chandrasekaran(டாடா சன்ஸ் சந்திரசேகரன் நியமனம் குறித்து டாடா டிரஸ்ட்): Tata Trusts on Tata Sons Chairman N Chandrasekaran extension.