மும்பை: தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய் கடியால் சிறுவர்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நாசிக்கில் தெரு நாய்கள் தொல்லை குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரியின் டேபிள் மீது, நாயை அவிழ்த்துவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் நிபாத் நகர் பஞ்சாயத்து அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எத்தனை முறை புகார் கொடுத்தாலும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
எனவே இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று முடிவெடுத்த போராட்டக்காரர்கள், 2 சிறிய தெருநாய்க்குட்டிகளை சாக்கு மூட்டையில் மறைத்து ரகசியமாக நகராட்சி அலுவலகத்திற்குள் கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்த தலைமை அதிகாரி தீரஜ் பாமரேவின் அறைக்குள் புகுந்து அவரது அலுவலக மேசையிலேயே அந்த நாய்க்குட்டிகளை அவிழ்த்துவிட்டனர். அத்துடன் நிறுத்தாமல் போராட்டத்தின் ஒரு பகுதியாக அந்த அதிகாரியின் மேசை மீது ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையையும் அவர்கள் வைத்து சென்றனர். நிபாத் நகரில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலர் நாய் கடியால் காயமடைந்தனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும், வாய்மொழி புகார்கள் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வீதிகளில் சுற்றும் நாய்களால் விநாயகர் சிலைகள் வைத்திருக்கும் இடத்திற்கு வரும் பக்தர்கள் அச்சமடைந்திருக்கின்றனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பந்தலில் படுத்துக்கொண்டு வருவோர், போவோர் எல்லோரையும் தெருநாய்கள் கடித்து அச்சுறுத்துகிறது என்று மக்கள் கூறுகிறார்கள். எனவே தெருநாய்களை பிடிப்பதற்காக பிரத்யேக வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நாய்களுக்கு தகுந்த கருத்தடை முகாம்களை உடனடியாக நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரிகள் டெண்டர் நடைமுறைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கண்டுக்கொள்வதில்லை என்றும் குற்றம்சாடிய பொதுமக்கள்.. இதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதே போல பல நாய்களை கொண்டு வந்து அலுவலகத்திற்குள் விடுவோம் என்று எச்சரித்துள்ளனர்.