தேர்தலில் களமிறங்கும் கரப்பான் பூச்சி கட்சி? நிறுவனர் அபிஜீத் சொன்ன முக்கியமான கருத்து

  • மும்பை: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டங்கள் நாளுக்கு நாள் கவனம் ஈர்த்து வருகிறது. அதற்குப் பெரியளவில் இளைஞர்கள் ஆதரவும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சி தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மிகத் தெளிவான பதிலைக் கொடுத்துள்ளார்.

    Advertisement

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முதலில் வெறுமன இணையதள இயக்கமாகத் தொடங்கினாலும் கூட அதன் பிறகு அது பல்வேறு இடங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகிறது. டெல்லி, பெங்களூர், ஜெய்ப்பூர் எனப் பல பகுதிகளில் கல்வித் துறையில் நடக்கும் குளறுபடிகளைக் கண்டித்துக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது.

    Advertisement

    தேர்தலில் போட்டி?

    இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சி தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்விக்கு அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே மிக தெளிவான ஒரு பதிலைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், "அடிப்படை உரிமைகளைக் கேட்பதற்காகவே நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. உரிமைகளைக் கேட்கத் தேர்தல் எதற்கு?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நீட் தேர்வுத் தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக நாடு முழுவதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதைக் கரப்பான் பூச்சி கட்சி வலியுறுத்துகிறது. கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டங்கள் ஓயாது என்றும் திப்கே அறிவித்துள்ளார்.

    Advertisement

    பிரதமர் மோடி மீது தாக்கு

    பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசிய திப்கே, "உலகில் எங்கு என்ன நடந்தாலும் ட்வீட் செய்யும் பிரதமர், நீட் முறைகேடு காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட 5-6 மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்கவில்லை.. உங்கள் 'மனதின் குரலை' (Mann ki Baat) பேசுவதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் மனதின் குரலைக் கேளுங்கள்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

    நாடு முழுக்க கரப்பான் பூச்சி கட்சி சார்பில் வரிசையாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சம்விதான் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கரப்பான் பூச்சி முகமூடிகளை அணிந்து கலந்துகொண்டனர். இது ஒரு நையாண்டி இயக்கமாகத் தொடங்கினாலும், தற்போது மாணவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தீவிர இயக்கமாக மாறியுள்ளது.

    Advertisement

    தள்ளுமுள்ளு

    போராட்டம் நடந்த இடத்திற்குக் காவித் துண்டு அணிந்த ஒரு கும்பல் வந்து, "ஜெய் ஸ்ரீராம்" என்று முழக்கமிட்டது. அவர்கள் கரப்பான் பூச்சி அமைப்பினரை நகர்ப்புற நக்சல்கள் என்றும், அவர்கள் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுப் பரபரப்பு நிலவியது.

    மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த இயக்கத்தை "அராஜகவாதிகள்" என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்த திப்கே, "நீட் முறைகேட்டால் தற்கொலை செய்துகொண்ட ஆகான்ஷா சதுர்வேதி போன்ற மாணவர்களுக்காகக் குரல் கொடுப்பது அராஜகம் என்றால், நான் அராஜகவாதிதான்" என்று பதிலடி கொடுத்தார்.

    Advertisement

    கடும் தாக்கு

    மத்திய அரசின் திட்டங்களான ஸ்மார்ட் சிட்டி, தூய்மை இந்தியா மற்றும் புல்லட் ரயில் போன்றவற்றை கடுமையாக விமர்சித்த திப்கே, "12 ஆண்டுகளாகியும் புல்லட் ரயில் வரவில்லை, எந்த நகரமும் இன்னும் ஸ்மார்ட் ஆகவில்லை" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    அமெரிக்காவில் படித்து, வசதியான பின்னணியில் இருந்து வந்தவர் திப்கே. அவரை பற்றி வரும் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்த திப்கே, "சமூக சேவை செய்ய வேண்டும் என்றால் ஒருவர் ஏழையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வசதி படைத்தவர்களும் தங்கள் சொந்த பணத்தைச் செலவழித்து நாட்டுக்காகச் சேவை செய்ய முடியும்.. இது எனது தனிப்பட்ட எதிர்காலம் குறித்த போராட்டம் அல்ல, இது நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் குறித்த போராட்டம். ஜனநாயகத்தில் போராட்டங்கள் மிகவும் அவசியம்.. அதுவே ஒரு ஆரோக்கியமான நாட்டிற்கு அடையாளம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

    English Summary

    Cockroach Janata Party founder Abhijit Dipke stated the movement will not contest elections(தேர்தலில் போட்டியிடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி): Cockroach Janata Party Contest Elections latest news in tamil.