நாகை வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. வலைகளை கொள்ளையடித்து அட்டகாசம்!

  • நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி வலைகள் உள்ளிட்ட உடமைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ​வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், அவரும் மேலும் 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கோடியக்கரைக்கு கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு அதிவேகப் படகில் வந்த அடையாளம் தெரியாத இலங்கை கடற்கொள்ளையர்கள் இவர்களது படகைச் சூழ்ந்துகொண்டனர்.

    Advertisement

    ​பின்னர் படகில் அத்துமீறி ஏறிய கடற்கொள்ளையர்கள், மீனவர்களைக் கொடூரமாகத் தாக்கி மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, மீனவர்கள் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், வாக்கி டாக்கி மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்ளையடித்துக்கொண்டு, மீனவர்களை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.

    ​இதையடுத்து, உயிருக்குப் பயந்து அவசரமாகக் கரை திரும்பிய மீனவர்கள், இச்சம்பவம் குறித்து கடலோரக் காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் கடலோரக் காவல் படையினர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ​நடுக்கடலில் தொடரும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களைத் தடுக்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English Summary

    An incident in which Sri Lankan pirates attacked Tamil Nadu fishermen—who were fishing in the open sea near Vedaranyam in Nagapattinam district—and stole their belongings, including their fishing nets, has caused great alarm and outrage in the region.