மரஅலமாரியில் வைத்த ரூ 4.88 லட்சம்! பெட்டியை திறந்தும் எலக்ட்ரீசியனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! கதறல்

  • நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் வீட்டில் மர அலமாரியில் சேமித்து வைத்திருந்த ரூ. 4 லட்சத்து 88 ஆயிரத்தை கரையான்கள் அரித்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையைச் சேர்ந்த செல்வமுருகன், எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வருகிறார். வெளியூர்களுக்குச் சென்று ஒப்பந்த அடிப்படையில் மின் வேலைகளைச் செய்து சம்பாதிக்கும் பணத்தை, வீட்டிலுள்ள மர அலமாரியில் சேமித்து வந்துள்ளார்.

    Advertisement

    இந்நிலையில், மின் சாதனங்கள் வாங்குவதற்காகப் பணத்தை எடுக்க அலமாரியைத் திறந்தபோது, அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை கரையான்கள் அரித்துச் சேதப்படுத்தியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக நாகையில் உள்ள வங்கிகளை அணுகியபோது, சென்னை ரிசர்வ் வங்கிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    சென்னை ரிசர்வ் வங்கியை அணுகியபோது, சீரியல் எண்கள் இல்லாத நோட்டுகளை மாற்றுவதில் சிக்கல் இருப்பதாகவும், முழுத் தொகையும் கிடைக்கும் என உறுதியளிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டதாக செல்வமுருகன் கூறுகிறார்.

    தாய், தந்தையை இழந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், உழைத்துச் சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமிக்காமல் வீட்டில் வைத்திருந்ததால் இத்தகைய இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

    Advertisement

    மேலும், தன்னைப் போன்றவர்கள் வீட்டில் பணத்தைச் சேமிக்காமல் வங்கிகளில் சேமிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன், கரையான்களால் சேதமடைந்த தனது முழு பணத்தை பெற தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.