நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 பவுன் திருடிய 3 பேர் கைது! விசாரணையில் பகீர் தகவல்

  • நாகர்கோவில்: நாகர்கோவில் (கன்னியாகுமரி யூடியூபர்) தம்மத்துகோணத்தில் யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் இசக்கிபாண்டி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் தொழிலதிபர். ஏலக்காய் பிசினஸ் செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா. இவர்களுக்கு 2 வயது குழந்தை உள்ளது. பிரபல யூடியூபரான இவர் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி தன் வீட்டில் உள்ள விதவிதமான ஆடைகள், நகைகள் அணிந்தும் ரீல்ஸ் போட்டார்.

    Advertisement

    மேலும் கட்டிலில் கட்டுக்கட்டாக பணத்தை போட்டுவிட்டு பணமழையில் நனைவது போன்றும் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் புதியதாக வீடு வாங்கிக் கொண்டு குடியேறினர்.

    118 சவரன் கொள்ளை

    குழந்தையின் பிறந்தநாளுக்கு துணி வாங்க கடந்த 24 ஆம் தேதி மாலை மதுமிதா கணவருடன் வெளியே சென்றிருந்தாராம். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த போது அவரது வீட்டு பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 118 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கேஸ் கட்டிங் மெஷின் கொண்டு அவரது வீட்டுபின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    Advertisement

    வினையான ரீல்ஸ்

    தனது வீட்டில் நகை, பணம் ஏராளமாக இருப்பதை ரீல்ஸ்ஸாக்கி தற்போது மதுமிதா சிக்கலில் சிக்கிக் கொண்டார் என கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த சம்பவத்திற்கு பிறகு மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டுக்கு போய் நிறைய பேர் அவரது வீடியோக்களை பார்த்தனர்.

    அசராத யூடியூபர் மதுமிதா

    துணி வாங்கும் வீடியோ, நகை வாங்கும் வீடியோ என நிறைய வீடியோக்களை போட்டிருந்தார். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டறிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த கொள்ளையால் மதுமிதா முடங்கி இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ரீல்ஸ் வீடியோக்களை போட்டார். இதனால் அவர் மேலும் பிரபலமானார்.

    Advertisement

    5 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

    இந்த நிலையில் தனிப்படை போலீஸார் அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், வழியில் இருந்த சிசிடிவி என 500-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் ஹெல்மெட் , முகக்கவசம் அணிந்து கொண்டு டெலிவரி பையுடன் பைக்கில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

    3 பேர் கைது

    இந்த காட்சிகளை வைத்து மதுமிதா வீட்டில் கொள்ளையடித்ததாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் இசக்கி பாண்டி (30) என்பவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுமிதாவின் ரீல்ஸ் வீடியோக்களை பார்த்துதான் கொள்ளையில் ஈடுபட்டதாக இசக்கிபாண்டி தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இசக்கி பாண்டியிடம் விசாரணை

    இசக்கி பாண்டி உள்பட 3 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். அது போல் ஒவ்வொரு மாதமும் தங்கம் வாங்கும் வழக்கத்தை மதுமிதா கொண்டிருந்தாராம். அதை அந்த கடைகளுக்கே சென்று வீடியோவாக போட்டிருக்கிறார். இது வடமாநில கொள்ளையராக இருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்தவர்களே கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    பணம், நகை

    இது போல் பணம், நகை இருப்பதை யாரும் வீடியோவாக எடுத்து போட வேண்டாம் என போலீஸார் எச்சரித்துள்ளனர். இது போன்றதொரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ரச்னா குர்ஜார் வீட்டிலும் நடந்துள்ளது. இவரது வீட்டில் இருந்த ரூ 8 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள், ரொக்க பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர். யூடியூபரான ரச்னாவும் இதே போல் தன்னிடம் இருக்கும் பணம், நகைகளை யூடியூப்பில் காட்டியதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

    English Summary

    Police arrested 3 in connection with Nagercoil Madhumitha house theft 118 pawns of gold. Police searches 500+ CCTV clippings to nab them.