நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கல்லூரி மாணவியிடம் தவெக நிர்வாகி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் தவெக நிர்வாகியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில், "கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தனது கட்சி நிர்வாகி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதல்வர் விஜய்?
சரித்திர பதிவேடு குற்றவாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் நிறைந்த கூடாரமாகத்தான் தவெக இருக்கிறது. முதலில் முதலமைச்சர் ஊருக்கு அறிவுரை சொல்வதற்கு முன், தனது கட்சியில் யாரையெல்லாம் சேர்த்திருக்கிறார் என்பதைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்குப் பாதுகாப்பு வழங்கி, குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், மக்களுடன் இணைந்து ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் இந்த அரசுக்குப் பாடம் புகட்டுவோம்" என கூறியிருக்கிறார். என்ன நடந்தது? கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளம்பெண் படித்து வருகிறார். இவர் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர். இவருடன் படிக்கும், தோழி மூலச்சல் பகுதியை சேர்ந்தவர். இந்த தோழி தவெக பெண் நிர்வாகியாவார். நேற்று முன்தினம் இருவரும் கல்லூரி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்திருக்கின்றனர். அப்பகுதி வழியாக வந்த தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், நான் அந்த வழியாகத்தான் போகிறேன்.. உங்களை இறக்கி விடுகிறேன் என்று கூறியிருக்கிறார். அவரது பேச்சை நம்பி இருவரும் காரில் ஏறியிருக்கிறார்கள். கொஞ்ச தூரம் வந்த பின்னர் மூலச்சல் பகுதியில் தவெக பெண் நிர்வாகியை இறக்கி விட்டிருக்கிறார். பின்னர், குலசேகரம்தான் போகிறேன் என்று சொல்லி.. அவரது தோழியை அழைத்து சென்றிருக்கிறார். போகும் வழியில் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. உடனே மாணவி கூச்சலிட்டு, காரிலிருந்து இறங்கி செல்ல முயல.. அவரை சமாதானப்படுத்தி அவரது வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு சென்றிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து மாணவி புகார் அளித்தும், நீண்ட போராட்டத்திற்கு பின்னரே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னும் கிறிஸ்டோபர் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.