நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்து வரும் பரவலான தொடர் கனமழை காரணமாக, உலகப் புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து, செந்நிறமாக மாறி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
கடந்த சில நாட்களாக கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மலைப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து வருகிறது.
வழக்கமாக வெண்ணிறமாகவும் அமைதியாகவும் காட்சியளிக்கும் நீர்வீழ்ச்சி, தற்போது மழை வெள்ளம் காரணமாக செந்நிறமாக மாறி, மிகுந்த சீற்றத்துடன் கீழ்நோக்கி பாய்கிறது. வறட்சி காரணமாக கடந்த ஜூலை மாதம் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தொடர்ந்து பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. ஆனால் தற்போது கொல்லிமலையில் தீவிரமாக பெய்து வரும் கனமழையால், நீர்வரத்து திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நீர்வீழ்ச்சிப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீர்வீழ்ச்சியின் ஆபத்தை உணராமல் சில சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் நீரில் குளித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சில நிமிடங்களுக்கு முன்பு அமைதியாகவும் வெண்ணிறமாகவும் கொட்டிக் கொண்டிருந்த நீர்வீழ்ச்சி, திடீரென செந்நிறமாக மாறி அதிகளவு நீருடன் ஆர்ப்பரித்து கொட்டும் நிலை ஏற்படுவதால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். மலைப்பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து, நீர்வரத்து எந்த நேரத்திலும் திடீரென அதிகரிக்கக்கூடும். இதனால் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி, நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் இருப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நீர்வரத்து மற்றும் வெள்ளத்தின் அளவை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சிப் பகுதிக்குச் செல்வதற்கும், குளிப்பதற்கும் வனத்துறையினர் தற்காலிகத் தடைகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், நீர்வீழ்ச்சிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலையில் உடனடியாக சுற்றுலாப் பயணிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.