ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது!

  • நாமக்கல்: ராசிபுரம் அருகே கடந்த 11 ஆம் தேதி துப்பாக்கி முனையில் 19 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜகுகன் (22) மற்றும் அஜித்குமார் (22) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட ஒன்பதரை சவரன் நகைகள், பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    Advertisement

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியாக வசித்து வந்த பெண்ணிடம் துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் 19 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Advertisement

    ராசிபுரம் அருகே பட்டணம் அம்மன் கோவில் தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதான கலைச்செல்வி, தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த பிறகு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று மாலை மகள் வீட்டிற்கு சென்று விட்டு இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய அவர், பின்னர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கலைச்செல்வியை சுற்றி வளைத்தனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டிய அவர்கள், கத்தியை கழுத்தில் வைத்து சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதையடுத்து கலைச்செல்வி அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்த அவர்கள், படுக்கையறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த மேலும் 14 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

    கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பிறகு அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி தனது மகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ராசிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.

    சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன. மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள ஒதுக்குப்புற பகுதியில் வீடு அமைந்திருப்பதை பயன்படுத்தி, முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    Advertisement

    இதைத்தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜகுகன் (22), அஜித்குமார் (22) ஆகியர் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட ஒன்பதரை சவரன் நகைகள், பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    English Summary

    Two individuals have been arrested in connection with an incident near Rasipuram on the 11th, where 19 sovereigns of gold jewelry were looted at gunpoint. Rajakugan (22) and Ajithkumar (22) were arrested, and 9.5 sovereigns of the stolen jewelry, along with the gun and knife used in the crime, were seized from them.