ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிவிப்பு வருமா.. அமைச்சர் சொன்னாரு பாருங்க ஒரு பதிலு

  • நாமக்கல்: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக அமைச்சர்களின் கருத்துகள் அவ்வபோது சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் பெண்களுக்கு இலவச கட்டணம் அளிப்பது போல, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் அறிவிப்பு வெளியாகுமா என்கிற கேள்விக்கு அமைச்சர் பார்த்திபன் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "போக்குவரத்து துறையில் தொழில்நுட்ப பணிக்கான பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள். விபத்துகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதை குறைக்க வேண்டும். இப்போது சராசரியாக 150, 160 வேகத்தில் கூட பயணிக்கிறார்கள். அரசு என்ன வேகம் நிர்ணயிக்கிறதோ அதில் பயணிக்க வேண்டும்.

    Advertisement

    அனைத்து பேருந்துகளிலும் ஏ.சி

    வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த வேகத்தில் தான் வாகனங்களை இயக்க வேண்டும். மகளிருக்கு இலவச பயணம் அறிவிப்பால் தனியார் பேருந்துகள் பாதிக்கப்படுவார்கள் என்கிற கருத்து உள்ளது. அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் அமர்ந்து பேசி முடிவு செய்யப்படும். யாருக்கும் பாதிப்பு இல்லாமல் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். அதற்கு தான் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப மினி பஸ் எங்கு தேவைப்படுகிறதோ ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களும், நகரங்களும் இணைக்கப்பட வேண்டும் என்று பதவியேற்கும்போது முதலமைச்சர் விஜய் கூறினார். ஆட்டோவில் மீட்டர் கட்டணம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் முதலமைச்சர் கூறியதை போல அனைத்து பேருந்துகளிலும் ஏ.சி வசதி செய்யப்படும்.

    Advertisement

    அமைச்சர் பதில் வைரல்

    இது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பேருந்துகளிலும் ஏ.சி பொருத்தப்படும். ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்படும்" என்றார். அப்போது,
    "தொடர்ந்து பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் அறிவித்துள்ளீர்கள். அதேபோல ஆண்களுக்கு ஏதாவது அறிவிக்க வாய்ப்புள்ளதா" என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பார்த்திபன், "என் தங்கையை உங்களுக்கு கட்டி கொடுத்துள்ளேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    என் மச்சானிடம், தங்கை பணம் கேட்க கூட செலவு வைத்து தொந்தரவு செய்ய கூடாது என்பதற்காக தான் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிவித்துள்ளோம். உங்களின் பணத்தை தான் மிச்சப்படுத்தியுள்ளோம்" என்று கூறினார். அமைச்சர் தமிழன் பார்த்திபன் பதில் அளித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English Summary

    Minister Tamilan Parthiban answer on Men free bus travel viral on social media.