நேபாளத்தில் ராசிபுரத்தைச் சேர்ந்த 3 பேர் மாயம்? செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் .. குடும்பத்தினர் கவலை

  • நாமக்கல்: நேபாளத்தை உலுக்கிய இந்த பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரும் சிக்கியுள்ளனர். இதில் தமிழர்கள் உள்பட 288 இந்தியர்கள் மாயமாகியிருககிறார்கள். இதில் புகழ்பெற்ற கைலாஷ் - மானசரோவர் யாத்திரைக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற பக்தர்களும் அடங்குவார்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள 'சூப்பர் யாத்ரா' என்ற தனியார் நிறுவனம் மூலமாக 57 பேர் நேபாளம் சென்றுள்ளனர்.

    Advertisement

    அவர்களில் 21 பேர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர். மீதியுள்ள 36 பேர் மாயமாகி உள்ளனர். இதேபோல் சென்னை குரோம்பேட்டையில் உள்ள 'மகாதேவ் கைலாஷ் யாத்ரா' என்ற நிறுவனம் மூலமாக 49 பேர் நேபாளத்துக்கு ஆன்மிக பயணம் சென்றனர். அவர்களும் மாயமாகியுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற மொத்தம் 85 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    இதனிடையே நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்தனூர் தாளம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் பழனிவேல் (62), அவரது மனைவி அருள்மணி (57), உறவினர் அசோகன் (67) ஆகிய 3 பேரும், கடந்த 14-ம் தேதி மகாதேவ் யாத்திரை ஏஜென்சி மூலம் ஆன்மிக சுற்றுலாவாக நேபாளம் சென்றுள்ளார்கள். இந்த நிலையில், நேபாளத்தின் சில பகுதிகளில் நேற்று முன் தினம் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ள 3 பேரின் நிலை குறித்து அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

    Advertisement

    மேலும், பழனிவேல், அருள்மணி, அசோகன் ஆகிய 3 பேரின் செல்போன்களும் தற்போது 'ஸ்விட்ச் ஆஃப்' நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனரா அல்லது பாதுகாப்பான இடத்தில் உள்ளனரா என்பது தெரியாமல் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
    இதையடுத்து, 3 பேரையும் தொடர்புகொண்டு அவர்களின் நிலையை அறிய குடும்பத்தினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நேபாள அதிகாரிகள் மற்றும் யாத்திரை ஏற்பாட்டாளர்களிடம் தகவல் பெறும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ராசிபுரத்தைச் சேர்ந்த 3 பேர் நேபாளத்தில் மாயமானதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், குடும்பத்தினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாயமானதாக கூறப்படும் பழனிவேல் முன்னாள் எம்.பி., சின்ராஜியின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இதனிடையே கும்பகோணம் நிறுவனம் மூலமாக சுற்றுலா சென்றவர்களில் 16 பேர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மாயமான தஞ்சையைச் சேர்ந்த சித்ரா (வயது 60) என்பவரது மகன் ராஜா கண்ணீர் மல்க கூறும்போது, 'கடைசியாக என் தாயார் நேற்று முன்தினம் காலை 'வாட்ஸ்-அப்'பில் ஒரு புகைப்படம் அனுப்பி இருந்தார். அதன்பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. மத்திய, மாநில அரசுகள் எங்களுக்காக மிகவும் துரிதமாக செயல்பட்டால் நன்றாக இருக்கும்' என்றார்.

    இதேபோல் தஞ்சையைச் சேர்ந்த இளவரசி பற்றியும் தகவல் கிடைக்கவில்லை. இதேபோல் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியை சேர்ந்த உணவக உரிமையாளர் நடராஜன் (67), இவரது மனைவி கிருஷ்ணவேணி (56) ஆகியோரும் குரோம்பேட்டை நிறுவனம் மூலமாக ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்று சிக்கி உள்ளார்கள். இவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.. இவர்களின் மகன் கவின்ராஜ் பெற்றோரை தேடி நேற்று காலை ஈரோட்டில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து விமானம் மூலம் காத்மாண்டு புறப்பட்டுள்ளார்.

    English Summary

    Three people from Rasipuram missing in Nepal? Mobile phones switched off; families worried