சாக்கடைக்கு குழி தோண்டிய போது.. மண்ணில் கொட்டிக்கிடந்த ரூ.80 கோடி தங்கம்.. ஷாக்கான குடும்பத்தினர்

  • நியூயார்க்: பெல்ஜியம் நாட்டில் பழைய வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, சுவருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளும் நாணயங்களும் புதையலாகக் கிடைத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சாக்கடை குழாய் தோண்டியபோது அடித்த யோகம்

    பெல்ஜியத்தின் கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் உள்ள டெண்டர்மாண்டே என்ற நகரில் ஒரு பழைய வீட்டைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. அங்கு கழிவுநீர் வெளியேறுவதற்கான சாக்கடை குழாய்களைப் பதிப்பதற்காக, கட்டிடத்தின் அடித்தளப் பகுதியில் தொழிலாளர்கள் துளையிட்டு தோண்டிக் கொண்டிருந்தனர்.

    Advertisement

    அப்போது, சுவரின் உள்பகுதியில் ஏதோ விசித்திரமாக இருப்பதை ஒரு தொழிலாளி கவனித்தார். அருகே சென்று பார்த்தபோது, அங்கே தங்க நாணயங்களும் தங்கக் கட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 9 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.80 கோடிக்கும் மேல்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    முதலில் 1 யூரோ நாணயம் என்றுதான் நினைத்தோம்!

    இந்தக் கட்டுமானக் குழுவில் பகுதிநேரப் பணியாக சேர்ந்திருந்த 18 வயது மாணவரான கோபே என்பவர், புதையலைக் கண்ட அந்த நொடியை விவரித்துள்ளார்.

    Advertisement

    "தொடக்கத்தில் சுவருக்குள் மின்னியதைப் பார்த்ததும் சாதாரண 1 யூரோ நாணயங்கள் சிதறிக் கிடக்கின்றன என்றுதான் நினைத்தேன். ஆனால், தோண்டத் தோண்ட அருகே ஒரு பெரிய தங்கக் கட்டியே இருந்தது. அப்போதுதான் இது ஏதோ மிகப்பெரிய புதையல் என்பதை உணர்ந்து அனைவரும் திகைத்துப் போனோம். அதிர்ச்சியும் வியப்பும் எங்களை அப்படியே உரைய வைத்தது" என்று கோபே கூறியுள்ளார்.

    நேர்மையாக போலீசில் ஒப்படைத்த தொழிலாளர்கள்

    இவ்வளவு பெரிய தொகையைத் தங்களுக்குள்ளேயே மறைத்துக் கொள்ளும் எண்ணம் தொழிலாளர்களுக்கு வரவில்லை. உடனடியாக உள்ளூர் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

    இதுகுறித்து மேனேஜர் பேசுகையில், "அங்கே ஏராளமான தங்கக் கட்டிகளும் நாணயங்களும் இருந்தன. இவ்வளவு பெரிய புதையலை மறைத்து வைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அதைவிட முக்கியமாக, அதை எடுத்துக்கொள்வது அப்பட்டமான திருட்டு. நேர்மையாக நடந்துகொள்வதே சரி" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தகவலறிந்து விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், அந்த இடம் முழுவதையும் சோதனையிட்டு, சுவருக்குள் இருந்த தங்கம் முழுவதையும் பாதுகாப்பான அரசு இடத்திற்கு மாற்றியுள்ளனர். மேலும், புதையல் ஆசையில் பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

    இந்த தங்கத்திற்கு யார் சொந்தக்காரர்? சட்டம் சொல்வது என்ன?

    தற்போது இந்த கட்டிடம் CAW Oost-Vlaanderen என்ற உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த அமைப்பின் இயக்குநர் கீர்ட் ஹில்லார்ட், இந்தச் செய்தி எங்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. சட்டப்படி இந்தத் தொகை எங்களுக்குக் கிடைத்தால், தினசரி பல ஏழை எளிய மக்களுக்கு நாங்கள் செய்யும் நலத்திட்ட உதவிகளுக்குப் பெரிய அளவில் பயன்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பெல்ஜியம் நாட்டு சட்டத்தின்படி, இப்படி எதிர்பாராமல் கிடைக்கும் புதையலுக்கு உரிமை கோர அதன் உண்மையான உரிமையாளருக்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு.

    இந்தத் தங்கம் எந்தவொரு குற்றப் பின்னணியோடும் தொடர்புடையது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டு, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இதன் உண்மையான உரிமையாளர் யாரும் முன்வராவிட்டால், அந்நாட்டு சிவில் சட்டப்படி இந்தத் தங்கத்தின் மதிப்பு பாதியாகப் பிரிக்கப்படும். ஒரு பாதி அதைக் கண்டுபிடித்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், மற்றொரு பாதி அந்த இடத்தின் உரிமையாளரான தொண்டு நிறுவனத்திற்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும்.

    English Summary

    Belgium Shock: Builders Drill for Sewage Pipe and Unearth Euro 9M Gold Stash Behind Wall