நியூயார்க்: நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் காக்பிட்டில் நடந்த பயங்கரத் தாக்குதலையும் மீறி, 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் இந்தியரான கேப்டன் ஸ்மித் மச்சார். படுகாயமடைந்த நிலையிலும் துணிச்சலாகப் போராடி ஒரு மிகப்பெரிய விமான விபத்தைத் தடுத்த அவருக்கு, உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக இஸ்ரேல் மக்கள், "இந்த வீரனின் பெயரை மறக்காதீர்கள்" என்று சமூக வலைத்தளங்களில் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்து வருகின்றனர்.
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஃபிளைதுபாய் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் 174 பயணிகளுடன் நடுவானில் சென்று கொண்டிருந்தது. விமானத்தை இந்தியாவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் இயக்கி வந்தார். விமானம் வானில் சுமார் 34,000 அடி உயரத்தில் சீராகப் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானி அறைக்குள் யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கேப்டன் ஸ்மித் மச்சாருடன் இருந்த துணை விமானி, திடீரென கத்தியை எடுத்து கேப்டனை சரமாரியாகக் குத்தத் தொடங்கினார். விமானத்தை வேண்டுமென்றே தரையில் மோதி விபத்துக்குள்ளாக்கும் சதித்திட்டத்தோடு அந்தத் துணை விமானி செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விமானத்தின் கட்டுப்பாடு தற்காலிகமாக இழக்கப்பட்டு, ஒரு நிமிடத்திற்குள் சுமார் 14,000 அடிகளுக்கு மேல் விமானம் செங்குத்தாகக் கீழே இறங்கியது. உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். உடலில் பலத்த கத்திக் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கொட்டியபோதும், கேப்டன் ஸ்மித் மச்சார் தன் சுயநினைவை இழக்கவில்லை. விமானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், துணை விமானியை எதிர்த்துப் போராடினார். விமானி அறைக் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தால் வெளியில் இருக்கும் பயணிகளாலும் மற்ற பணியாளர்களாலும் உள்ளே வர முடியாது. அந்த ஆபத்தான விநாடிகளில், மிகுந்த சமயோசித புத்தியுடன் செயல்பட்ட ஸ்மித் மச்சார், துணை விமானியின் பிடியை மீறி விமானி அறையின் கதவைத் திறந்துவிட்டார். கதவு திறந்ததும், வெளியே இருந்த ஒரு பயணியும், விமானத்தில் பயணம் செய்த மற்ற பணியாளர்களும் விரைந்து உள்ளே பாய்ந்தனர். ரத்த வெள்ளத்தில் நின்றுகொண்டிருந்த துணை விமானியை மடக்கிப் பிடித்து வெளியே இழுத்துப் போட்டு கட்டினர். உடனடியாக மற்ற விமானக் குழுவினர் விமானத்தின் கட்டுப்பாட்டைக் கையில் எடுத்தனர். இதனையடுத்து விமானம் சவூதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 174 பயணிகளும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாகத் தப்பினர். விமானம் தரை இறங்கியதும் படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் சவூதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, இஸ்ரேல் மக்கள் சமூக வலைத்தளங்களில் ஸ்மித் மச்சாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கத் தொடங்கினர். "அவரது பெயரை நினைவில் வையுங்கள்: ஸ்மித் மச்சார்" என்ற வாசகம் இணையம் முழுவதும் வைரலானது. இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல இணையப் பதிவர் ஐனவ் அவிசெமர், "இந்த இந்திய விமானிக்கு எனது மனமார்ந்த நன்றி. அவர் செய்த செயல் அளப்பரியது. அவர் மட்டும் தைரியமாகப் போராடாமல் இருந்திருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது" என வீடியோவில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். மற்றொரு பிரபல நெட்டிசன் தாலியா ஜோசப், "உங்கள் ஒவ்வொருவரும் ஸ்மித் மச்சார் என்ற பெயரை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கடுமையான காயம் அடைந்த நிலையிலும் போராடி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய நிஜ ஹீரோ அவர்" என்று பாராட்டியுள்ளார். 5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட நிமா யமினி, "விமானத்தைக் கடத்தி அழிக்க நினைத்த பயங்கரவாதச் செயலைத் தடுத்து நிறுத்திய இந்த இந்திய விமானிக்கு தலைவணங்குகிறோம்" எனக் கூறியுள்ளார். இஸ்ரேலிய பத்திரிகையாளர் நேரியா கிராஸும், ஸ்மித் மச்சார் காட்டிய அசாத்திய துணிச்சல்தான் அனைவரையும் காப்பாற்றியது என்று விவரித்துள்ளார். உலக நாடுகளின் தலைவர்களும் ஸ்மித் மச்சாரைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு நிஜமான ஹீரோ. கடுமையான காயங்கள் அடைந்தபோதும், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது அசைக்க முடியாத உறுதியும் வீரமும் மிகப்பெரிய விபத்தைத் தடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இந்தியாவே அவரை எண்ணிப் பெருமை கொள்கிறது. அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இந்திய கேப்டன் காட்டிய அசாதாரண துணிச்சல் ஒரு பேரழிவைத் தடுத்துள்ளது" என்று பாராட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அவர் உண்மையான ஹீரோ. கடுமையான காயத்துடன் உயிருக்குப் போராடியபோதும், விமானத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, சமயோசிதமாக கதவைத் திறந்து அனைவரையும் காப்பாற்றியுள்ளார்" என்று பாராட்டியுள்ளார். குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கேப்டன் ஸ்மித் மச்சார், இந்தியாவில் உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 11 ஆண்டுகள் மூத்த விமானியாகப் பணியாற்றிப் பயிற்சி அளித்தவர். 2022-ல் ஃபிளைதுபாய் நிறுவனத்தில் சேர்ந்த அவர், போயிங் 737 ரக விமானங்களை இயக்குவதில் 9,750 மணி நேரங்களுக்கும் அதிகமான அனுபவம் கொண்டவர். அந்த அனுபவமும், கடைசி நொடி வரை தளராத அவரது மன உறுதியும் இன்று 170-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் உயிரைக் காப்பாற்றி உலக அளவில் ஒரு மாபெரும் ஹீரோவாக அவரை உயர்த்தியுள்ளது.