நியூயார்க்: பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளை அமெரிக்கா கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும். சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரின், குவைத் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா ராணுவ தளங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களை கட்டுப்படுத்தி வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவை நம்பி இருப்பது சரியா என்ற கேள்வி வளைகுடா நாடுகளிடம் எழுத தொடங்கியுள்ளது. ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் அணுகுமுறை டொனால்ட் ட்ரம்பின் மாறுபட்ட அறிவிப்புகளால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
உலக அளவில் பொருளாதாரத்திலும் சுற்றுலாவிலும் வளைகுடா நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கச்சா எண்ணெய் உற்பத்தி அந்த நாடுகளின் மிகப்பெரிய பொருளாதார ஆயுதமாக இருக்கிறது. அதே நேரத்தில் உலக அரசியலைப் பொறுத்தவரை அமெரிக்க உடன் வளைகுடா நாடுகள் நெருக்கமாக இருக்கின்றன.
அமெரிக்காவுடன் பாதுகாப்பு ரீதியிலான உறவு பல ஆண்டுகளாக பேணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா ராணுவத்தினர் ராணுவ தளங்களை அமைத்திருக்கின்றனர். ஈரான் உள்ளிட்ட எதிரி நாடுகளிடமிருந்து தங்களை பாதுகாக்க இந்த ராணுவ தளங்கள் உதவும் என்பது அமெரிக்காவின் எண்ணம். ஆனால் தற்போது இந்த நம்பிக்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள மோதல் வலுத்து வரும் நிலையில், அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சவுதி அரேபியா, கத்தார், பக்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அமெரிக்கா போரை தொடங்கினால் அதற்கான விலையை வளைகுடா நாடுகள் செலுத்த வேண்டியிருக்கிறது என்ற மனநிலை அங்குள்ள மக்களிடம் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை நம்பி தான் இருக்கிறது. தற்போது ஹார்மூஸ் நீரிணை வழியாக உலகின் மிகப்பெரிய அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் நடைபெறும் நிலையில் இந்த கடல் வழித்தடத்தில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அதன் தாக்கம் வளைகுடா நாடுகளை மட்டும் இன்றி உலக நாடுகளையும் பாதிக்கிறது. மேலும் ஏமன் பகுதியில் ஹவுதி அமைப்பினரின் தாக்குதல்களால் செங்கடல் மற்றும் பாப் அல் மந்தாப் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படுவதோடு சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கிறது. இது சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்சினையாக மாறி உள்ளது. அமெரிக்காவின் கூட்டாளியாக பல ஆண்டுகளாக இருந்து வரும் நாடுகளுக்கும் இது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அமெரிக்கா ராணுவ பாதுகாப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அமெரிக்காவின் பிராந்திய நடவடிக்கைகள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்க கூடாது என்பதில் சவுதி உள்ளிட்ட நாடுகள் தற்போது கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிப்பு, கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினையில் உருவாகும்போது அமெரிக்காவை மட்டும் நம்பி இருப்பது போதாது என்ற எண்ணம் அந்நாடுகளிடம் உருவாகி இருக்கிறது. இதுதான் வளைகுடா நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த எண்ணத்திற்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கொள்கை முரண்பாடுகளும் காரணமாக சொல்லப்படுகிறது. ஈரான் விவகாரத்தில் ஒரு பக்கம் கடுமையான ராணுவ எச்சரிக்கை கொடுப்பது, மறுபுறம் பேச்சுவார்த்தைக்கு தயார் என சொல்வது என ட்ரம்ப் மாறி மாறி குழப்பி வருகிறார். இந்த நிலையற்ற தன்மை அமெரிக்காவின் எதிரிகளுக்கு மட்டுமின்றி அதன் கூட்டணி நாடுகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக சொல்கின்றனர். அடுத்து என்ன நடக்கும் என அமெரிக்காவின் நட்பு நாடுகளே பதில் சொல்ல முடியாத நிலை இருப்பதால் அவர்கள் வேறு பாதையை தேர்ந்தெடுக்க தொடங்குவது இயல்பானது தான். இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே உறவை பேணும் வகையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆபிரகாம் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது. ஆனால் பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது அரபு நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காத நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பது அரபு மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் தாக்கமும் வெளிநாட்டுக் கொள்கையில் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது. மேலும் அமெரிக்காவை மட்டும் நம்பாமல் தங்களுக்கு பாதுகாப்புக்கு பிராந்திய அளவில் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வளைகுடா நாடுகளிடம் அதிகரித்து வருகிறது. சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் உள்ள நாடுடன் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல வளைகுடா நாடுகளிடமிருந்து மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக சீனா இருக்கும் நிலையில் எண்ணெய் வர்த்தகத்தை தாண்டி முதலீடு, உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ,பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீனாவுடன் உறவை அரபு நாடுகள் அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவுடனும் பொருளாதார மற்றும் ராஜதந்திர தொடர்புகளை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இன்னும் பல வளைகுடா நாடுகளுடன் மிகப்பெரிய பொருளாதார மற்றும் ராணுவ தொடர்பில் இருக்கும் நிலையில் அந்த ஒப்பந்தங்களை உடனடியாக கைவிடுவது சாத்தியமில்லை என்றாலும், அமெரிக்காவுடன் இருந்தால் பாதுகாப்பு என்ற நிலைப்பாட்டில் இருந்து, தற்போது அமெரிக்காவுடன் நட்பு இருந்தாலும் நமது பாதுகாப்பும் முக்கியம் என்ற நிலைக்கு வளைகுடா நாடுகள் தள்ளி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வளைகுடா நாடுகள் முழுமையாக அமெரிக்கவுக்கு குட் பை சொல்லிவிட்டன என்று சொல்ல முடியாது என சொல்லும் உலக அரசியல் பார்வையாளர்கள், வரும் நாட்களில் அந்த நிலையை நோக்கித்தான் அவர்கள் செல்கிறார்கள் என்கின்றனர்.வளைகுடா நாடுகள்
கச்சா எண்ணெய்
சவுதி அரேபியா
அமெரிக்கா
டொனால்ட் ட்ரம்ப்
கூட்டணி நாடுகள்
ஆபிரகாம் ஒப்பந்தம்
சீனா
பாதுகாப்பும் முக்கியம்